பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

வழங்குதல் கட்டாயக்கடன் என்பதைக் கற்றுத் தெளிவோர் முற்றும் உணர்ந்து கடனாற்றல் முதற்கடனாம்.

கற்றுத் தெளிந்தோர் பிறநாடு நோக்கா வகையில் உரிய வாய்ப்புகளை யெல்லாம் உருவாகித் தருதலில் முந்து நிற்க முனைதல் அரசின் கடமையாம்! இவ்விரண்டு கடமைகளும் ஒன்றற்கு ஒன்று தாங்குதலாய் அமைபவை.

எடிசனார்க்கு வேண்டும் வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தரவில்லை என்றால் அஃது அரசின் குற்றம்; ஏனெனில் அவர் கண்டுபிடிப்புகள் உலகநலம் செய்வன; அதனை முன்னே உணரவில்லை என்றாலும் பின்னேயாவது நாடும் அரசும் உணர்ந்து கடமை புரிந்தன. ஆனால் நம் கண்காண வாழ்ந்த தமிழகத்து எடிசனார் கோ. துரைசாமியார் (சி.டி. நாயுடு) மூளைக்கூர்ப்பும், உருவாக்கத் திறனும் நாட்டுக்கு முழுதுறு பயனாக்க அரசு முயன்றதா? முனைந்ததா?

முயலாத, முனையாத கேடு, அவர்க்குத் தீமையானதா? நாட்டுத் தீமையானதா?

புத்தாக்கம் புரிவாரைப் போற்றிப் பயன் கொள்ளாத நாடு, புத்தாக்கிகளை அயல் நாடுகளுக்கு ஓட ஓட வெருட்டியடிக்கும் நாடேயாம்!

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்”

என்பது நம் மறை.