பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. உயிர் தளிர்த்தல்

"பின்னே வாழப் போவதாகச் சொல்லப்படும் வாழ்வை நினைத்து, முன்னே வாழும் வாழ்வைப் பாழாக்கி விடாதே” என்பது மெய்யுணர்வு மிக்க மேலோர் திருவள்ளுவர் திருநோக்கு எனக் குறித்தோம்.

கண்ணின் பரப்பைக் கடந்து விரிந்தது கடல். அது மேனீர், கீழ்நீர்,நிலநீர் என மூவகை நீர்களால் அமைந்தது. ஆதலின் முந்நீர் என்பதும் அதற்குப் பெயர்.

மேனீர் ஆகிய மழை நீர் மாசற்றது. கீழ் நீர் ஆகிய ஊற்று நீரும், நிலநீர் ஆகிய ஓடு நீரும் நிலத்தின் இயல்பு கொள்ளும். இயலாகவும் செயலாகவும் உண்டாம் மாசு கொண்டு ஓடுவது, இம் முந்நீரையும் கொண்ட கடல்நீரோ வாயில் வைக்கவும் இயலா உப்புடையது. அக்கடலைப் பாற்கடல், தயிர்க்கடல், மோர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், நன்னீர்க் கடல், உவர்க்கடல் என ஏழாகக் கூறின் இறுதிக் கடல் ஒன்றை யன்றிப் பிறவெல்லாம் இட்டுக் கட்டப்பட்ட மாறுபாடுதானே.

இம் மாறுபாட்டு நோக்கில் பாற்கடலை உண்டாக்கியதும், மந்தரமத்தையும், வாசுகிக் கயிற்றையும் கொண்டு வானவரும் அசுரரும் கடல் கடைய அமுதம் எழுந்த கதை கட்டியதும், அமரர்க்கு அமர வாழ்வு அளித்ததாகிய புனைவும் ஆகிய வெல்லாம் நெஞ்சறிந்த மெய்யொடு கூடியவைதாமா?

·

-

வள்ளுவ நோக்கு, வாய்மை நோக்கு ஆயிற்றே! வாழ்வாங்கு வாழும் வாழ்வு நோக்காயிற்றே! அதனால் அமிழ்தம் ஈதெனக் கண்டு காட்டிக் கமழக் கமழ உரைக்கின்றார். அமுது எனப் பாலமுது நீரமுது சோற்றமுது - அவிழ்தமுது எனப் பல அமுதுகள் சொல்கின்றோமே இவ்வமுதுகளின் மூல அமுது எது எனின், மழை என்றார் திருவள்ளுவர். மண்ணில் நின்றோ, மண்ணுள் இருந்தோ வரும் நீர் அமுது அன்று! வான் நின்று தூயதாய் விழும் மழை நீரே அமிழ்து என்கிறார்.