பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

அவர் தம் மழலைச் சொற் கேட்டலும் அவ்வாறே இன்பமாம். இசை அமிழ்தினும் இனிய அமிழ்தமாம் மழலையமிழ்தம் (66) என்பது வள்ளுவர் வாய்மொழி.

அம்மட்டோ? தம் மக்கள், தம் உடலைத் தழுவிக் கட்டிக் கொள்ளும் கழி பேரின்பம் இருக்கிறதே, அதுவும் அமிழ்தக் கொள்ளையாம். (65) தென்றலும் மதியும் சேர ஊட்டும் இன்பமும் குழந்தையர் தழுவிக் கொள்ளும் இன்புக்கு இணையாகாது என்பதுஅவர் கருத்து.

வீட்டிலே பூரிப்பு வாழ்வாகத் திகழ்கின்ற அம்மக்களைக் கண்டு, அன்னைக்குப் பூரிப்பு. வீட்டிலே வளமாகவும் வாழ் வாகவும் திகழ்கின்ற இம்மக்கள், உலகத்து உயிர்களுக்கெல்லாம் இன்பம் செய்பவராய் அமைய வேண்டும். தாம் பெற்ற இன்பப் பேற்றினும் உலகத்து உயிர்கள் எல்லாம் அவர்களால் பெற வேண்டும் பேறே பெரிது எனப் பேணி வளர்க்கும் பூரிப்பு, பெரும் பெயர்ப்பூரிப்பு (69, 70,68) எனக் குறிப்பிடுகிறார்.

வீட்டிலே தொடங்கி உலக இன்பமாகத் தவழும் பேறு எதனால் உண்டாயது? அறத்தால் உண்டாயது எவ்வறத்தால் உண்டாயது? இல்லறத்தால் உண்டாயது! அதனால் “அறத்தான் வருவதே இன்பம்” என்ற திருவள்ளுவர்,

“அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை” என்றார் (39,40)

நரை, திரை, மூப்பு, தமக்கு வராமைக்குத் தம் துணைவி யாரும், தம் மக்களும் தன் ஊரவரும், தம் ஆட்சியரும் தக்காராக இருப்பதே என்ற பிசிராந்தையார் உரை வீட்டில் இருந்து நாட்டளவாக விரியும் இன்பத்தைச் சுட்டிக் காட்டுகிறது. நாடு உலகமாக, அனைத்து உயிருமாக விரிவது திருவள்ளுவர். திருநோக்கம் என்பது அறியத்தக்கதாம். உயிர் தளிர்க்க வைக்கும் அமிழ்து குடும்ப வாழ்வில் உண்டாம். குடும்ப இன்ப அன்பின் ஈடு இணியில்லாச் சுரப்பே உலக உயிர் நேய ஊற்றுக்கண் என்பது வள்ளுவத் தெளிவாம்.