பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம்

"சிறுமை பல செய்து சீரழிப்பது சூது”

-

40

"பழகிய செல்வத்தையும் பண்பையும் கெடுப்பது சூது” "உடை செல்வம் ஊண் புகழ் முதலியவற்றை ஒழிப்பது சூது" என்றெல்லாம் கூறினார்.

சூதின் இயல்பினை ஓர் அரிய உவமையால் கூறினார் திருவள்ளுவர்.

புழுவைக் கவ்வ வரும் மீன் தூண்டில் முள்ளையும் கவ்வி மாட்டிக் கொண்டு மாள்கின்றது அல்லவா! அப்படியே சூதனும் சிறிய ஆசையால் பெரிய இழப்புக்கு ஆட்படுவான் என்றார்.

அப்படித் தன் சிற்றார்வத்தால் தான் பேரிழப்புக்கு உட்பட்டு எல்லாம் இழந்தாலும் இழப்பை எண்ணிச் சூதாட்டை விட்டொழிப்பானா எனின், மாட்டான்; அச்சூதினை விட்டொழியான் என்பதை,

"இழத்தொறும் காதலிக்கும் சூது' என்று தெளிந்து

கூறினார்.

இழக்க இழக்க இந்த ஆட்டத்தில் வென்று விடலாம்; இந்த ஆட்டத்தில் வென்று விடலாம் என்று பெருக்கிப் பெருக்கிப் பேராசைப் பேயாட்டம் போடவைக்கும் சூது என்றார்! இவற்றை உணர்ந்து பார்த்தால் அரசு சூதுக்கு எவ்வகையிலும் இடம் தரலாமா?

அறிவறி பெருமக்கள் விளையாட்டுக்காக எனினும், பொழுது போக்குக்கெனினும் சூது ஆடலாமா?

பழகிப் பாழாகிப் போன தம் கேட்டை, வரும் இளைய பாலுள்ளங்கள் பார்த்துப் பழகிவிட வழிகாட்டலாமா?

சூதாடிய தருமன் செயலை எண்ணிய வீமன் அருச்சுனனை நோக்கி, "எரிதழல் கொண்டு வாடா தம்பி, அண்ணன் கையை எரித்திடுவோம்” என்று கூறுவதாகப் பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதப் பாட்டு அவர் சூதினை வெறுத்த வெறுப்பின் வெளிப்பாடுதானே!

வள்ளுவர் உட்கொண்ட வாழ்வியல் வளநோக்கை வையகம் பற்றிக் கொள்ளுமானால் சூதுக்களமாக மாறி வரும் உலகம் மாண்பு உலகமாகத் திகழுமே!