பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நோக்கு

225

அவனிடம் இல்லாக் குறையை இருப்பதாகக் காட்டி ஊடல் உவகை கொள்கிறாள் (1321, 1325). அவனும் "இல்லாப் பழி இழிபழியன்றே; இனிப்பே “என்று ஊடித் திளைக்கிறான் (1329) இருவரும் ஒருவராய் உவக்கும் ஒப்பிலா நிலை அது (1330).

சங்கத் தொகை நூல்களின் மருதப் பாடல்களில் வரும் பரத்தையிற் பிரிவைச் சூறைக் காற்றில் சுழல் பஞ்செனப் பறப்பித்ததோடு, குப்பைக் குழிக்குள் தள்ளி மட்கிப் போகச் செய்யவும் வழி காட்டியவர் திருவள்ளுவர். இந்நாளில் பெரு விளம்பரப் பொருளாகி அலைக்கழிக்கும் ‘எயிட்சு' என்னும் கொல்லிக்கு இடமில்லா இனிய வாழ்வு 'ஒருமை மகளும்’ ‘ஒருமை மகனும்’ ஆக வாழ்தல். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்பதைத் தமிழ் மண்ணில் அவாவிய நோக்கு திருவள்ளுவர் நோக்கு. உலகவர் நோக்கு இந்நோக்கில் ஒன்றுதல் உலக உய்வு நெறி.