பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. செல்வ ஒப்பு

செல்வ ஒப்பினைச் சிந்தித்தாரா வள்ளுவர்? குமுகாய ஒப்பந்தங் கண்டார் உரூசோ!

பொதுவுடைமை கண்டவர் காரல்மார்க்கசு!

அவர்களுக்கு முன்னைய பொருளியல் சிந்தனையாளர் சிலரும் இருந்துளர்! ஆனால் திருவள்ளுவர் அச்சிந்தனையில் ஊன்றியவரா? அறமுரைத்த திறவராம் திருவள்ளுவர் அவ்வற வழியிலே பொருள் தேடிப் பகுத்துண்டு பாங்குற வாழும் பான்மையைப் படைத்த அருமை பாராட்டும் தன்மையதாம்! கல்வி செல்வம். கேள்வியும் செல்வமே.

எனப் பல்லான்ற செல்வங்களைக் கண்ட திருவள்ளுவர், பொருட் செல்வத்தின் சீர்மையையும், செம்மையையும், செழுமையையும் சொல்லாமல் விடவில்லை!

அருளென்னும் அன்பு ஈன்ற குழந்தை பொருளென்னும் செல்வச் செவிலியால் வளர்க்கப்படும் என்றவர் அவர்.

பொருட்டாக எண்ணக்கூடாதவரையும் பொருட்டாக எண்ணவைக்கும் பொருளே பொருள் என்றவரும் அவர்.

பொருள் என்பது பொய்யாவிளக்கு என்று புகன்றவரும் அவர். "அப்பொருள் அவர் இருக்கும் இடத்தையன்றி அவர் எண்ணிய இடத்திலும் நாட்டிலும் சென்று புகழ் ஒளி பரப்பும்” என்றவரும் அவர்,

"பொருள், முயற்சியால் ஈட்டப்படுவது" என்றும், “அவர்கள் தலைவிதியால் அடையப் பெறுவது இல்லை" என்றும் வரையறுக்கும் அவர், “பொருட்செல்வம் பூரியரிடத்தும் உண்டு" என்றும் கூறுகிறார்.

"பொருட்செல்வம் இல்லாமல், நல்லோரும் உழைப் போரும் நலியும் நிலை உண்டானால் அதனை மாற்ற முயலாத சட்டம் செய்யாத அரசு அழியட்டும்" எனச் சாவிக்கிறார்.