பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரக்கட்டுப்பாடும் திருக்குறளும்

313

உண்டாக்கும் என்பதால், துணை நலத்தினும் வினைநலம் சிறந்தது என்கிறார்.

தொழில் தேர்ச்சியாளர் ஒருவர் அதற்குத் துணையா வாரை வேலை வாங்குதற்கும், தொழில் தேர்ச்சியும் தொடர்பும் இல்லாத ஒருவர். அத் தொழிற்குத் துணையாவாரை வேலை வாங்குதற்கும் மிகுந்த வேற்றுமை உள்ளமை எவரும் அறிந்ததே. தொழில் தேர்ச்சியாளர், தொழிலாற்றுவார்க்கு உண்டாகும் சிக்கலை உடனுக்குடன் கண்டு, சிக்கலைத் தீர்த்துச், சீராக இயங்க வழிகாட்டுவார். அத் தேர்ச்சி இல்லாதவரோ, துணையாவார் என்ன சொல்வார்களோ அதைக் கேட்டு, என்ன செய்வார்களோ அதைப் பார்த்து அவ்வளவில் அமைவார். தொழிலகங்கள் பல முடங்கிப் போதலும், இயங்காதொழிதலும், மூடப்படலும், வினைநலம் இல்லாத் தலைமையால் நிகழ்வதாம். அதே பொறிகள், அதே துணையர், அதே தொழிலகம் தக்க வினை நலம் உடைய தலைமை வாய்த்தலால் 'ஓஓ ' என்று று பாராட்ட வெற்றி நடையிடுதலும் நாம் காண்பனவே.

“துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்” (651)

ஒரு செயலைச் செய்வதற்கு விரும்புவார், எச்செயலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதனை விரிவாக விளக்குகிறார். எத்தொழிலைத் தெரிந்து தேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்வதற்குத் தெரிந்து தெளிதல் குறிப்பு உதவுகின்றது. அது,

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’

என்பதாம் (504). இதனைச் செய்தலால் உண்டாகும் நலப்பகுதி இது; கெடுதல் பகுதி இது என்பவற்றைத் தெளிவாக ஆராய்ந்து, நலம் மிகுதியாக இருக்குமானால் அதனைச் செய்க என்பதே இதன் செய்தியாம்.

இதனால் எச்செயலிலும் குணம், குற்றம் என்பவை உண்டு; அவற்றுள் குணம் மிக இருந்தால் கொள்ளுக; குறை மிக இருந்தால் தள்ளுக என்கிறார்.