பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

இளங்குமரனார் தமிழ்வளம் 5

இப்போலிமையின் விளைவு என்ன?

மெய்யாகவே புகழுக்குரியராய்ப் பாராட்டுக்கு உரியராய் இருக்கும் ஒருவரை உள்ளார்ந்த அன்புடன் தாமே முன்னின்று தம் கைப் பணம் செலவிட்டு நடத்தும் நல்லெண்ணமுள்ள வரையும் முன்னைக் கூட்டத்துள் ஒருவராகச் சேர்த்துவிடும் இழிமைக்கு இடமாக்கி விடுகிறது.

பழம் புலவர்களின் இயல்பு நவிற்சியை விடுத்து, பிற்காலப் புலவர்கள் பத்து உருபா தந்தவரையும் பத்துப் பிறப்பெடுத்த திருமாலெனப் புகழ்ந்து, "போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடின் தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்” என்பதற்குச் சான்றானவர்களையும் வெல்லுவார் போலப் பதவியுடையாரைப் பாட்டுடை தலைவராக்கிப் பாடிப் பாடிக் குவித்து அவர்களுக்கு இயல்பான தலைக்கனத்தை மேலும் பெருக்கித் தாளம் போடும் நிலைமை பெருகிவிட்ட போது, மெய்ப்புகழும் பொய்ப்புகழாகவே தோன்றும் என்பதற்கு ஐயமில்லயே!

"தம்புகழ் கேட்க நாணம் கொள்ளுதல்" இயல்பான ஆண்மைப் பண்பாடு.

தம் புகழை நேருக்குநேர் கூறுதல் நட்புக்கும் ஒரு குறைவே என்பது நட்புச் சால்பு.

புகழும் வேண்டாப் புகழின் வாழ்வாதல் மெய்ப் புகழாளர் இயற்கை.

வறிய புலவர் பெருஞ்சித்திரனார். முதிரத்துக் குமணனைப் பாடிப் பரிசிலுடன் திரும்பினார். தம் மனையாளிடம் அதனைத் தந்து

66

இன்னவர்க்கு என்று எண்ணாதே;

என்னைக் கேட்க வேண்டும் என்றும் எண்ணாதே;

வைத்து வாழ்வோம் என்றும் கருதாதே;

எல்லோர்க்கும் கொடு;

இப்பரிசில் வழங்கியோன் வள்ளல் குமணன் ஆவன்'

என்று கொடைப் புகழைக் கொடுத்தானுக்கே கொடுத்தவர் அவர்.