பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

இளங்குமரனார் தமிழ்வளம் 5

என்று விடையையும் எதிர்பாராது நடந்தார் சித்திரனார். இள வெளிமான் வெட்கமுற்றான். அதியமானையும் புலவர் விட்டு வைத்திருக்க மாட்டார்! ஆனால் அவன் முன்பே இறந்து போனான்.

குப்பைக் கீரையை உப்பில்லாது வேக வைத்து உண்ணும் ஏழைப் புலவன் நாடாளும் வேந்தனுக்கு நல்குகின்றான் பரிசு! வருள் வறியவர் யார்? வள்ளல் யார்? வாழ்க சித்திரனார் உள்ளம்! புலமையின் இயல்பு

வேந்தனுக்குக் கொடை வழங்கிய பெருமிதத்துடன் புலவர் வீடு சேர்ந்தார். மனைவியார் எதிர் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்.புலவர் குடும்பம் பொலிவுடன் விளங்கிற்று. ஆனால் தாம் மட்டும் வாழ எண்ணும் எண்ணத்தை அறியாதவர் அல்லவா சித்திரனார்! அதனால் பெற்ற பரிசுப் பொருளினைப் பேணிக் காத்து நெடுநாள் வாழ விரும்பினார் அல்லர். வறுமை நெருப்பு ஊரைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் பொழுது, தாம் மட்டும் வளமை நீரில் நீந்தி மகிழ்வாரோ?

புலவர், மனைவிக்குப் புகன்றது

மனைவியை அருகழைத்தார். அன்புக்குரிய அவர் புலவரை நெருங்கினார். "மனையுரிமை பூண்ட மாண்பு உடை யோய்! நீ வியப்புடன் கண்டு களிக்கின்றாயே, இப்பொருள் அனைத்தும் குமண வள்ளல் தந்ததாகும். இச் செல்வத்தை நின்னை விரும்புவோர் அனைவருக்கும் தருக! அன்றி, நீ விரும்பு மாறுள்ள அனைவருக்கும் தருக! மற்றும், கற்புமிக நிற்கும் உன் உரிமைச் சுற்றத்திற்கும் உதவுக! நம் வறுமையை நோக்கி முன்பு நமக்கு உதவியவர்களுக்கும் தருக! அவ்வாறு நீ கொடுப்பதிலும், இன்னவர்க்குத் தருதல் வேண்டும் என்று கருதாது, என்னிடம் கேட்டே தரவேண்டும் என்றும் எண்ணாது, இந்நிதியால் நெடுங்காலம் வாழ்வோம் என்றும் நினைக்காது எல்லோருக்கும் அளவில்லாது தருவாயாக!” என்று கூறினார்.

புதியவொரு வள்ளல்

வறுமைப் புலவன் இல்லம் வள்ளல் இல்லமாக மாறியது. தமிழ் தந்த வளத்தைத் தாழ்வறப் பெற்றனர் ஊரார். உலகம் வாழ வாழ்ந்த புலவரது உயர்குணத்தை அவர்கள் பாராட்டினர். “வாழ்க! தமிழ் தந்த வளம்” என்று வாழ்த்தினர்.