பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பெருங்குன்றூர் கிழார்

தமிழ்நாடு நானிலவளமும் ஒருங்கே பெற்ற நாடு ஆகும். நானிலங்களையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் பெயர்களால் அழைத்தனர். மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை என்றும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் என்றும் குறிப்பிட்டு முன்னவர் அழைத்தனர்.

இந் நானிலங்களுள் மலைநிலம் ஆகிய குறிஞ்சி இயற்கைத் தாயின் வளத்தினைப் பெருகப் பெற்றுள்ள இடமாகும். அகிலும் தேக்கும், வேங்கையும், கோங்கும், குறிஞ்சியும் காந்தளும், அசோகும் சாந்தமும், வாழையும் கமுகும் வளம்பெற வளர்ந்து வானமளாவத் தோன்றும்; ஏலமும் மிளகும், காயமும் கரும்பும் வரம்பின்றிக் கிடக்கும்; நெல்லும் தினையும், புல்லும் சாமையும் மிகுதியும் விளையும்; அருவியின் முழக்கும், ஆற்றின் ஒழுக்கும், குரவைக் கூத்தும், கொடிச்சியர் பாட்டும், வேலன் பாணியும், வேடுவர் சீழ்க்கையும், புலியின் உறுமலும், யானையின் பிளிறலும், சிங்கத்தின் முழக்கமும், கரடியின் ஆர்ப்பும், மந்தியின் குரலும், மானின் அசைவும், பறவையின் இசையும், வண்டின் ஒலியும் எங்கெங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும்; அருவியும் சுனையும் ஆங்காங்குத் திகழும்; மலைக் குகை வீடும், சிறு குடியிருப்பும் இடந்தொறும் இடந்தொறும் காணப்பெறும்! ஊரும் நகரும் சிற்சில இடங்களில் விளங்கும்.

பெருங்குன்றூர்

இத்தகைய வளப்பம் மல்கிய குறிஞ்சியினை அடுத்துப் பெருங்குன்றூர் என்னும் பேர் ஊர் ஒன்று இருந்தது. அவ்வூரினர் நாகரிகம் கைவரப் பெற்றவர்களாக விளங்கினர்; உழவும் தொழிலும் உயர்வெனப் பேணி வாழ்ந்தனர்; மலையினின்று கிடைக்கும் அரிய பொருள்களும்; உழவினால் கிடைத்த வருவாயும் அவர்களை வாழவைத்தன. இவ்வூரிலே உழுதொழில் புரியும் வாழ்க்கையினராகிய புலவர் ஒருவர் இருந்தார். அவர் ய பெருங்குன்றூர் கிழார் என்னும் பெயரால் அழைக்கப் பெற்றார்.