பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

123

இதுகாறும் பண்பு ஒப்பதே மாந்தர் ஒப்பு என்றும், மக்கள் உறுப்பும் தோற்றமும் கொண்டிருப்பார் அனைவரும் மக்கள் எனப்படார் என்றும், மக்கட் பண்பு இல்லாதவர் எத்தகைய கூர்மையானவர் எனினும் மரம் போன்றவரே என்றும், ஊக்கமே மக்கட்கு உயரிய செல்வம் என்றும், ஊக்கத்திற்குத் தகவே அவர்க்கு உயர்வு கிட்டும் என்றும் கண்டோம்.

ஒன்றுக்கு இரண்டு

கல்வி அறிவில்லான் ஒருவன். ஆனால் செல்வன்; அவ னுக்கு ஒரு மகன்; அவனையும் கற்பதற்கு அனுப்பச் செல்வனுக்கு எண்ணமில்லை.

ஓராசிரியர் அச் செல்வனை அடுத்து, அவன் மகனைப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகிறார். ஆசிரியர் தம் பிழைப்புக் கருதியே தன்மகனைப் பள்ளிக்கு அழைக்க வந்திருக்கிறார் என நினைத்தான்.

"பிள்ளையும் படிக்க வேண்டாம்

பிரம்படி படவும் வேண்டாம்

சள்ளையாம் சுவடி தூக்கிச்

சங்கடம் படவும் வேண்டாம்

முள்ளெனும் ஆணி கொண்டு

முரியினில் எழுத வேண்டாம் பிள்ளையென் றிருந்தால் போதும் பெற்றவள் களிக்க”

என்றான்.

ஆசிரியரோ கல்வியின் சிறப்பைப் பலவகையாலும் எடுத்துரைத்தார். ஆனாலும், “கல்வியால், என்ன பொருள் கிடைக்கும்? செலவிட்டு வேறு படிக்க வேண்டுமாமே!” என நினைத்தான்.

"உம் கல்வியால் 'வண்டியோ, மணியோ, மாடோ! கிடைக்குமா? நீர் தருவது எழுத்துத்தானே! அவன் தலை யெழுத்தை அழித்து விடுவீரோ! அவன் படிப்புக்குச் செல வாகும் தொகையைக் கொண்டு ஒருமாடே பிடித்து விடலாமே" என்றான்.

ஆசிரியர், "நீ ஒரு மாடு பிடித்தால் போதும்; உன்னிடம் இரண்டு மாடுகள் அப்பொழுது இருக்கும்” என்றார்.