பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழமை

11. நல்ல தோழராக

தோழர் என்பது இக்காலத்தில் மிகுதியாக வழங்குஞ் சொல். ஆனால், தோழன், தோழி, தோழமை என்பனவெல்லாம் மிகு பழஞ்சொற்களே. "தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் பழமொழி, வாழ்வியல் உரைக்கும் சிறப்பினது.

‘தோழி’ என்னும் சொல்லை ஒரே ஓர் இடத்தில் வள்ளுவர் வழங்கியுள்ளார் (1284). தோழன், தோழமை என்பவற்றை வழங்கினார் அல்லர்.

நட்பு

நட்பு என்னும் சொல்லையே வள்ளுவர் பெருவழக்காக ஆள்கிறார். கேண்மை, தொடர்பு, பழக்கம், ஒன்றுதல் என்ப வற்றையும் வழங்குகிறார். பழைமை என்பது வழிவழியாக வரும் நட்பாகும்.

நட்பு என்பது நள் என்னும் வேர் வழியாக வந்த சொல். நள் + பு நட்பு; நள்ளுதல்-நெருங்குதல்; செறிதல்.

நட்பும் காதலும்

நட்பு என்பது உள்ளத்து அளவால் காதலுக்கு ஒப்பானது. அக் காதல் அளவில் நில்லாமல் இடித்துக் கூறும் ஆசிரியன் போலவும், உரிய பொழுதில் தன்னையும் கொடுக்கும் கொடை யாளன் போலவும் அமைவது அது,

காதலாம் துணை ஒன்றே. ஆனால், நட்பாம் துணை அவ்வொன்று என்னும் அளவில் நிற்பது இல்லை. சங்கப் பலகை போலத் தக்கார்க்கெல்லாம் தகுதியான இடந்தந்து விரியும் விரிவினது அது.

காதல் பால்வேறுபாடு உடையது. ஆனால், நட்பு அவ் வேறுபாடும் இல்லது.

காதல் துணை, வீட்டளவில் நிற்றல் பெரும்பாலும் வழக்க மாக உள்ளது. நட்புத்துணை, இடங்கடந்த விரிவினது.