பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 6.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

திருக்குறள் ஆராய்ச்சி 1

35

கேட்க வாய்க்கும்' என்னும் விருப்பத்தை உண்டாக்குதல் வேண்டும் (643). இது சொல்வன்மைக்கு அளவு கோல் ஆகும்.

இவ் வன்மையைத் தம்மிடத்துத் தங்க வைத்துக் கொள்ள விரும்புவார், பிறர் விரும்பும் வகையில் சொன்னால் மட்டும் போதாது; பிறர் சொல்லுகின்ற அரிய செய்திகளின் பயன் களையும் ஆர்வத்தால் கொள்ள வேண்டும். அத்தகைமையே தம் குறையுண்டாயின் நீக்கி மாசற்ற மணியாக்கிக் கொள்ள உதவும் (646).

திறனறிதல்

சொல்லும் சொல்லைத் தம் திறனறிந்து கூறுவது பயணாகி விடாது. கேட்பவர் திறனறிந்து கூறுதல் வேண்டும். கைக்குழந்தைக்கும், குழந்தைகளுக்கும், இளையர்க்கும், வளர்ந் தோர்க்கும் தகத்தக உணவாக்கமும் உண்பிக்கும் வகையும் தாயரும் பாட்டியரும், போற்றுவதில்லையா? அப்படிக் கேட் பார் திறத்திற்குத் தகச் செய்திகளைக் கூற வேண்டும்.

பலப்பல சொல்ல வேண்டும் என்பது இல்லை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே சொல்வார்க்கும், கேட்பார்க்கும் இன்பம் பயப்பன, அதனை அறியாரே பலப்பல சொல்லிப் பொழுதைப் பாழாக்கி, வெறுப்புக்கும் ஆளாகித் தோல்வி காண்பர் (649).

சொல்வார்வேறு; கேட்பார் வேறு என வேறுபடத் தோன்றா வகையில் கேட்பவரோடு இரண்டறக் கலந்து இனிமையாகச் சொல்லும் திறத்தைப் பெற்றால், அவர் சால்லைக் கேட்டவர் அனைவரும் அப்படியே ஏற்று அருமையாகப் போற்றிக் கொள்வர் (648).

பார்வைப் பூ

மல்லிகை முல்லை அரும்புகளின் இதழ் மெல்லென விரியத் தொடங்கிய அளவிலேயே பக்கமெல்லாம் மணம் பரவி விடுகிறது. முகையாக இருந்த போதே அதனுள் ஒடுங்கிக் கிடந்த நறுமணம் மடைதிறந்த வெள்ளமெனக் காற்றில் பரவத் தொடங்கி விடுகின்றது. இப்படியே நாளெல்லாம் தேங்கிக் கிடந்த நயமிக்க கருத்துகளெல்லாம் நாவசைத்த அளவில் சொல் வல்லாரிடத்துச் சுடரிட்டுச் சுவையாகி வெளிப் படு கின்றது. அவ்வல்லமை இல்லாரோ, இதழ் விரித்தும் மணமே இல்லாத பார்வைப்பூ - இலைப் பூ - போல, அவையோர்க்கு இன்பந் தாராராய், வெறுப்புக்கும் இடனாகி விடுகின்றனர் (650).