பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

129

“என்னால் தங்கள் வீட்டிலே தங்கியிருக்க முடியவில்லை. தங்களிடம் இருந்த அருளின் அளவுக்குப் பொருள் இல்லை என்பதை அறியாதவனா நான்? தங்கள் உயர்ந்த குணத்தினால் அறச்சாலை நடத்தினீர்களே ஒழிய, பணத்தினால் இல்லை என்பதை ஊரே அறியுமே! கையில் காசு இல்லாவிட்டாலும், செய்யும் திருப்பணிகளை மட்டும் தவறாது செய்துகொண்டு வந்தீர்கள். உங்களைப் பாராட்டுவதற்காக இதனை நான் எழுத வில்லை. பாராட்டு, வாக்கிலே நின்றால் யாருக்குப் பயன்? சுருங்கச் சொன்னால் என்னால் தங்கள் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியவில்லை. தங்கள் அன்பும், தொண்டும் என்னை ‘வெளியே போ' என்று விரட்டியடித்தன.

தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு நன்றியறிதலுடையவ னாக நான் வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அது என் தவறு என்று எண்ணக்கூடும். ஆனால் என் சூழ்நிலையை நோக்கும்போது, அன்று மட்டுமன்று இன்றும் கூட நான் செய்ததே சரி என்றே தோன்றுகிறது. நான் போய்வருகிறேன் என்று கேட்டால் தாங்கள் விடை தந்து அனுப்பி வைத்திருப் பீர்களா? அம்மையார்தான் அனுமதிப்பார்களா? உடல் சரியாகட்டும் போகலாம் என்று கூறித் தடுத்திருப்பீர்கள். என் உடல் நலமாகும் அளவும் நான் அங்கிருந்தால் எவ்வளவு அல்லல்கள் தந்திருப்பேன்! அது எனக்குப் பிடிக்கவில்லை. தங்கள் இல்லத்திலிருந்து வந்து சேர்ந்த யான் அறிவேன். அது போல் தங்கள் இல்லத்திலிருந்து யான் வெளியேறியதைத் தாங்கள் அறியமாட்டீர்கள். நான் மயங்கிக் கிடந்த பொழுதிலே வீட்டுக்கு வந்தேன். நீங்கள் உறங்கிக் கிடந்த பொழுதிலே வெளியேறினேன். இது தவறாயின் தாங்களும், அருமை அன்னையும், அன்புச் செல்வியும் என்னை மன்னிப்பீர்களாக!

என்நெடும் பயணத்தைத் தொடங்கினேன். வழிபோன பக்கமெல்லாம் போனேன். எத்தனை எத்தனையோ காடுகள், சிறுமலைகள், தொடர் மலைகள் கடந்தேன். வெளித்திண்ணையில் படுத்திருந்தாலும், எழுப்பி வைத்துச் சாப்பிடச் சொல்லும் ஏழைகள் வாழும் பட்டிகள் தமிழகத்தில் இன்னும் இருக்கின்ற காரணத்தால் உயிருடன் ஒரூரை அடைந்தேன். நோக்கும் திசை யெல்லாம் தொடர் மலையாகக் காட்சியளித்த அவ்வூருக்குக் கடமலைக்குண்டு என்பது பெயரென அறிந்தேன். அங்கேயே தங்கி விட்டேன். தாங்கள் இருக்கும் கரிவலம் வந்த நல்லூர் எங்கே, இந்தக் கட கடம் மலைக் குண்டு எங்கே? கனவு உலகில் திரிபவனுக்குக் காதம் காலடி தூரம்தானே!