பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கதைகள்

69

இப்படி எத்தனை எத்தனையோ உண்டு. மணியடித்துக் கொண்டு வந்தால் போதும். மாணவர்களுக்குக் குழந்தையின் தள்ளுவண்டி நினைவுக்கு வந்துவிடும். இனிப்பை நாடும் எறும்புகள் போன்று சிறுவர்கள் கூடிவிடுவர். வருமானம் வரவர மிகுதியாயிற்று. நாளொன்று, எப்படிப் போனாலும் ஐந்து ரூபாய்க்குக் குறையாத வருவாய் தந்தது.

மணியடித்துக்கொண்டு வண்டியுடன் வந்தான் குழந்தை. சிறுவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறும் நேரம். பள்ளியின் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து “டுமீல்” என்னும் பெருஞ்சத்தம் ஒன்று கேட்டது. 'என்னவோ' என்று திகைப்புடன் வண்டியைப் பற்றியும் கவலைப்படாது கிணற்றருகே ஓடோடிச் சென்றான். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேர்கள் கூடினர். "ஐயோ! ஐயோ!! விழுந்து விட்டான்! விழுந்துவிட்டான்! என்று கூக்குரலிட்டனர். ஆனால் எவரும் கிணற்றுள் வீழ்ந்தவனைக் காப்பாற்றத் துணியவில்லை.

குழந்தை ஒரே தாவாகக் கிணற்றுள் தாவி வீழ்ந்தான். நீந்தத் தெரியாமல் மூழ்கித் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்துத் தூக்கினான். தன் தோள்மீது போட்டுக் கொண்டான். படிக்கட்டோ, திட்டையோ எதுவும் இல்லாத கிணறு அது. பத்துப் பதினைந்து அடி தண்ணீருக்கு எப் பொழுதும் குறைவாய் இருக்காது. சிறுவனை அணைத்துக் கொண்டு நிலைநீத்தில் நின்றான். அதற்குள் மேலே நின்றவர்கள் கயிறொன்றைத் தொடங்கவிட்டனர். அதன் வழியே சிறுவனுடன் மேலே வந்தான் குழந்தை.

செத்தவனுக்கு உயிர் தந்தது போன்ற இந்த அருஞ் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. “குழந்தை” என்னும் பெயர் எல்லோர் வாயிலிருந்தும் வெளியேறியது. பள்ளிக்கூடம் குழந்தைவேலின் துணிவான செயலைப் பாராட்டிப் புகழ்ந்தது. கிணற்றில் வீழ்ந்த சிறுவனின் பெற்றோர்கள் 'உயிர் காத்த உபகாரி' என்று செய்தித்தாளுக்கு எழுதியனுப்பித் தம் நன்றி அறிதலைப் புலப்படுத்தினர். இவற்றையெல்லாம் கேட்டறிந்த நல்லையா இன்பக் கண்ணீர் சொரிந்தார். “நான் கண் கெட்டவன், ஆனாலும் பெரும் பேறு செய்தவன் தான்” என்று தம்மைத் தாமே வியந்து கொண்டார்.

ஐந்தாறு ஆண்டுகள் சென்றன. குழந்தையினிடம் பத்தாயிர ரூபாய்க்குமேல் சேர்ந்து விட்டன. ஊரின் நடுவே இருந்த கடை யொன்றைப் பிடிக்க நினைத்தான். அந்த இடம் வாடகைக்கு