பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. தீயும் தீமையும்

கதிர் எழுவதில் பேரின்பம் கண்ட காட்டு மனிதன் காரிருளைக் கண்டு அஞ்சினான். கொடிய விலங்குகள் காரிருளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னைச் சூறையாடுவதைக் கண்டு துன்புற்றான். எப்பொழுதுவிடியும் என்று எதிர்பார்த்துக் கிடந்தான். பொழுது விடிந்தால்தான் தனக்கு விடிவு உண்டு என்பது அவன் எண்ணத்தில் ஆழமாகப் பதிந்து இருந்தது. இந்நிலைமையில் கதிரோன் கிழக்கே எழுந்தால்—அது கதிராகக் காட்சியளிக்குமா?-கடவுளாகவே காட்சி தந்தது; கைதூக்கி வணங்கினான்; வாயார வாழ்த்தினான்.

இருள் வரும்; ஏக்கமும் உடன் வரும்; பொழுது விடியும்; வேதனை குறையும்- இப்படித்தான் நாளும் பொழுதும் கழித்தான்.

என

ரவில் கவலையின்றி இருக்க வழியில்லையா எண்ணினான். அவன் எண்ணம் அவனைச் சுற்றிப் பற்றி எரியும் தீயில் படிந்தது. அதில் நன்றாக ஊன்றியது. கற்களையும், மூங்கில்களையும் தேய்த்துத் தேய்த்துத் தீ உண்டாக்கினான். இயற்கையைக் கண்டு கண்டு தோய்ந்த அறிவால் படைத்த படைப்பு அது. அதனை வளர்த்தும், துணிப் பந்தங்களில் பற்ற வைத்துப் பிடித்தும் தீய விலங்குகளின் அச்சத்தைக் குறைத்தான். தீமையை ஒழித்துக்கட்ட அவன் கண்ட கருவி தீயாயிற்று.

தீ புல்லில் பற்றி எரியும்போது பொரிந்து விழுந்த புல்லரிசி சுவை மிக்கதாய் இருக்கக் கண்டான்;கிழங்கும் காயும் பக்குவமாதலைக் கண்டான்; ஊன், வாய்க்கு மெதுவாகப் பதப்படுதலைக் கண்டான்; - படிப்படியாகத் தீயின் துணையால் வயிற்றுத் தீத் தணிக்கும் சுவைப் பொருள்களைப் படைத்து இன்புற்றான்; பிறரையும் இன்புறச் செய்தான்.

மூளையால் வளர்ந்த மாந்தன் மேலும் முன்னேற்றங் கண்டான், சுட்டுப் பதப்படுத்தும் தீயால் உடலைச் சுட்டு நோய்களைத் தீர்க்க முடியும் என்பது அவன் தெளிவு ஆயிற்று. அதன் விளைவு தான், மாடுகளுக்குச் சூடுபோட ஏவியது; பிறந்த குழந்தைகளுக்கும் சூடுவைக்கத் தூண்டியது.