பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

107

தொண்டு புரிய முற்பட்டால் அப்புதல்வராம் செல்வம் மருந்து மரமே!

ஏழைக்கு எழுத்து அறிவிக்கும் நற்பணியை இனிது நடாத்துவோன் பெற்ற கல்விச் செல்வம் மருந்து மரமே.

தன்னடையைக் கண்டு பிறரையும் நடக்கத் தூண்டி நல் வாழ்வு வாழ்வோன் பண்புடைமைச் செல்வம் மருந்து மரமே.

உயிரோட்டம் ஆகும் குருதி ஓட்டம் குறைந்து உயிருக்குப் போராடி நோய்க்கிடையில் கிடக்கும் ஒருவனுக்குத் தன் உடலிலிருந்து ஒரு துளி அளவிலேனும் குருதி யளிப்போனது குருதிச் செல்வமும் மருந்து மரமே!

குப்பை கூளங்களைக் கண்ட இடங்களில் கொட்டாதவாறு மலநீர்களை நடைபாதையில் கழிக்காதவாறு பொது இடங்கள் தூய்மை இழக்காதவாறு மன்றங்களும், அவைகளும், கோவில்களும் தகுதி இழக்காதவாறு உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் தொண்டுச் செல்வமும் மருந்து மரமே! பிறருக்குப் பயன் படும் அனைத்தும் மருந்து மரமே. இவ்வாறு மருந்து மரமாக வாழ முயன்றால் வேறும் இன்ப உலகம் உண்டா? இவ்வுலகமே இன்ப உலகம் என்றும், இங்கு வாழ்பவர்களே தெய்வ நிலை வாழ்வுடையவர்கள் என்றும் ஆதல் உறுதி. ஆனால், நாமும் நம் செல்வமும் மருந்து மரமாக விளங்க வேண்டுமே! விளங்க, ஒன்றே ஒன்று வேண்டும்; அது பெருந் தகைமை என்பதே. பிறர் வாழத் தான் வாழ்தலே பெருந்தகைமை!

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.