பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. அருட் செல்வர்

நெசவு ஆலை உரிமையாளருக்கு வேட்டிப் பஞ்சம் இருக்க முடியாது. கரும்பு ஆலை உரிமையாளர்க்குச் சருக்கரைப் பற்றாக்குறை இருக்க இயலாது. இவைபோல உலகத்து உயிர்கள் அனைத்தின் மீதும் பேரருள் செலுத்திவரும் பெருந்தகைமை யாளருக்குத் தன்னுயிருக்கு அஞ்சும் நிலைமை இருக்காது.

பன்னீரைப் பிறருக்கு இறைப்பவனுக்குப் பன்னீர்த் துளி விழாதா? அதன் மணம் மணக்காதா? இது போலவே அருளை வெள்ளமாக இறைப்பவனுக்கு அருள் மழை பொழியாதா? அதன் இன்ப நலம் எய்தாதா?

66

'தீமையாகட்டும் நன்மையாகட்டும் நாமே தேடிக் கொள்வதுதான்; உயர்வு ஆகட்டும் தாழ்வு ஆகட்டும் நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்வது தான்” இது பழந்தமிழர் பண்பாட்டுத் தெளிவுரை! இவ்வாறாயின், அருளை விதைப்பவன் வளர்ப்பவன் காப்பவன் அருட்பயன் பெறத்தானே செய்வன்? தினை விதைப்பவன் தினை அறுப்பான் என்பது பழமொழி! உலக உயிர்களை அருள் நீரால் வளர்த்து வருவதைக் கடனாகக் கொண்ட அருள் வள்ளல் அருட்கனியை, வேண்டுங்கால் வேண்டுங்கால் எல்லாம் எளிதில் அனுபவிப்பான்.

அருளாளனுக்குத் துன்பம் என்பது இல்லை! எதனால்? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்! ஏன்? அருளாளன் பிள்ளை ஊரார் அனைவரின் உள்ளன்புக்கும் உரித்தாகிப் போகிவிடுகின்றது அல்லவா! ஒருவன் கவனிப்புச் சிறக்குமா? ஊராரின் ஒத்த கவனிப்புச் சிறக்குமா?

எல்லா உயிர்களுக்கும் அல்லல் நேரிடாமல் தன்னுயிர் போல் பேணும் ஒருவனை மற்றை உயிர்கள் அனைத்தும் தம் உயிரின் உயிராகப் போற்றாவா? தமக்கு அழிவு நேரினும், அருளாளனுக்கு அழிவு ஏற்படக்கூடாது என அமைந்து காத்து வாழவே செய்யும்.