பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. புகழ்மிக்க தவம்

காந்தியடிகள் உலகில் தோன்றினார்; கதர்த்துணிக்கு ஒரு பெருமை ஏற்பட்டது. மற்றைத்துணிகளிலும் கதர்த்துணிக்கு ஏன் பெருமை ஏற்பட்டது. மற்றைத் துணிகள் நூல்மதிப்பால், நெசவின் தரத்தால், சாயச் சிறப்பால் மதிக்கப்படுகின்றன. ஆனால் கதர் இவற்றுடன் நில்லாமல் வேறு பலவற்றால் மதிக்கப்படுகின்றது. கதரை நினைத்தவுடனே அதனை வளர்த்து வளமாக்கிவிட்ட காந்தியடிகள் அருள் நோக்கு, அமைதிப்போர், அறநெஞ்சம், உலகெல்லாம் ஒன்றெனக் கருதும் உயர்பாடு, உழைப்பின் பெருமை, எளிய வாழ்வின் எழில் ஆய அனைத்தும் கண்முன் தோன்றித் தனிப்பெரும் சிறப்பினை நல்குகின்றன.

புகழ் மல்கிய கோவில் கருவறைச் சிலைக்கும், பொருட் காட்சிச்சாலைக்கும் எத்துணை வேறுபாடு? அத்துணை வேறுபாடு உண்டாக்கிவிட்டது கதர்த் துணிக்கும் மற்றைத் துணிகளுக்கும். காந்தியடிகளின் தொண்டன், உரிமைக்கட்சிக்கு உழுவலன்பன் என்பதைக்காட்டும் புறக்கோலமாக அமைந்து விட்டது கதர்! துணியால் அமைந்த சிறப்பு அன்று! துணியால் எனின் காந்தியடிகள் கதரை வளர்க்கு முன்னரே தனிப்பெருமை இருந்திருக்கவேண்டும்! அஃதில்லை. கதர்த்துணியின் உள்ளின் உள்ளாக ஒளிந்து கிடந்து ஆனால் பளிச்செனத்தோன்றி ஒளிவிடும் உணர்வால் ஏற்பட்ட சிறப்பு.

இதுபோலவே ஒரு காலத்தே காவித்துணிக்குத் தமிழகத்தில் தனிப்பெருமை ஏற்பட்டது. 'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்னும் நிலைக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர் காவியுடுத்தனர். 'தின்ன வரும் புலிதன்னையும் அன்பொடு நோக்கும்' அருளாளர் காவியுடுத்தனர். 'புகை நடுவினில் தீ இருப்பது போல் பகை நடுவிலும் இறைவன் உள்ளான்' எனக் கருதிய ஆன்றோர்கள் காவியுடுத்தனர். பிறவுயிர்கள் ஈடேறுதற்குக் கல்வியறிவும், மெய்யுணர்வும் தருவதும், தொண்டு புரிவதும் இவர்கள் கடப்பாடுகளாக இருந்தன. ஆகலின் இத்தகையரே அருளாளர் என்றும், அறவோர் என்றும், துறவிகள் என்றும்,