பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

தா க்கமாட்டான். வாள் வீரன் படைக்கலம் இல்லாத வீரனைத் தாக்கமாட்டான். எந்த வீரனும் உறுப்பு இழந்தவன், ஆடை நெகிழ்ந்தவன், குடுமி அவிழ்ந்தவன், புறமுதுகிட்டவன், போருக்கு வராமல் ஒதுங்கி நின்றவன், இளையர், கிழவர், பெண்டிர் ஆகியவர்களைத் தாக்கமாட்டான். அக்காலப் போர்க் கொள்கை அது.

காலந்தோறும் வேறுபடும் கோட்பாடுகள் உள. பழங் காலப் போர்க் கொள்கைகளை இக்காலம் போற்ற முடியுமா? காலநிலை மாறிவிட்டது! கோட் பாடுகளும் மாறவேண்டியவை ஆய்விட்டன. ஆனால் மாறாக் கொள்கைகள் இல்லையா?

புறக் கருவிகள் மாறிமாறி அமைவதும் அகக் கருவிகள் மாறாமையும் கண்கூடு! வள்ளுவப் பெருந்தகையும், கிறித்து பெருமானும் தெளிந்த அன்பு நெறியும், அருள் நெறியும் எக் காலத்துக்குப் பொருந்தா? எவ்விடத்திற்குப் பொருந்தா? அக் கோட்பாடுகள் மாறிவிடுமாயின் மனிதப் பூண்டு வாழமுடியுமா?

ஆகவே, மாறி மறையும் கோட்பாடுகளில் அழுந்தி நிற்பதினும். மாற்றமுறாக் கொள்கைகளில் அழுந்தி நிற்பது ஆயிரம் ஆயிரம் மடங்கு அவனுக்கும் மன்பதைக்கும் நலம் பயக்கும். அத்தகைய மாறாக் கொள்கையை உயிரெனக் கொண்டோரே மாநிலம் போற்றும் மாண்பினராக உள்ளனர். எஞ்சியோர் சிற்சில காலத்துச் சிற்சில இடத்துக் கிளர்ந்து, ஓரெல்லையுள் மறைந்து போகின்றனர்.

இன்றைய உலகம் புதுமைப் பேறாகக் கொள்ளும் ஒரு கொள்கை துன்புறுத்தாக் கொள்கையாம். (அகிம்சை) இக் கொள்கை வள்ளுவம் பிறந்த இம்மண்ணுக்குப் புதியது அன்று. காந்தியடிகள் தோன்றியபின், இக்கொள்கை புதிய விளக்கம் பெற்றிருக்கின்றது. 'கோகினூர்' வைரம் என்றாலும் ஒரு குடிசைக்குள் மறைத்து வைக்கப்பெற்று இருந்தால், அதன் சிறப்பை அகிலம் அறிவது எப்படி? உலக மேடையிலே, உயர்ந்தோர் அரங்கிலே உலவவிட்டால் உண்மை நிலை புலனாம்! இப் பணியைத்தான் காந்தியடிகள் செய்து காட்டினார்! ஏட்டளவில் இருந்த துன்புறத்தாக் கொள்கை உலகெலாம் பரவும் நிலை கண்டார். காரணம் என்ன? சொல்வீரர் அல்லர் அவர்! செயல் வீரர்! "செயலாற்று இன்றேல் செத்துமடி” என்பது அவர் வாக்கினின்று முகிழ்த்த முழுமணி!

துன்புறுத்தாக் கொள்கையின் பயன் என்ன? இன் புறுத்தலே பயனாம்! இதனினும் உலகுக்கு என்ன வேண்டும்?