172
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
அல்லாமல், குடியை விடமாட்டேன் என்றல்லவோ பிடிவாதம் செய்கின்றனர்.
இத்தகைய தீய பற்றுகளுக்கு அடிமையாகாத ஒருவனுக்கு இவை பற்றிய துன்பம் உண்டா? காபி குடிக்கும் பழக்கம் இல்லாத ஒருவனுக்கு அதனை எதிர்பார்த்திருக்கும் துன்பம் ல்லை; காசு கிடைக்கவில்லையே என்னும் ஏக்கம் இல்லை. 'காபி நன்றாக இல்லை' என்னும் குறைபாடு இல்லை! ஆம்! காபி குடிக்காத ஒருவன் காபி பற்றிய துன்பத்திலிருந்து விடுதலை அடைந்து விடுகிறான். இப்படியே வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை எத்தனை பொருட்களை ஒதுக்குகிறானோ அவ்வளவுக்குத் துன்பத்திலிருந்து விலகுகிறான்; இன்பத்திற்கும் அணுகுகிறான்.
கால்பட்டவுடன் நீர்ப்பாசி அகலும்; காலை எடுத்தவுடன் நீர்ப்பாசி கூடிச்சேரும். அதுபோல் 'வேண்டாமை' என்னும் உயர் எண்ணம் தலைதூக்கினால் துன்பப் பாசி அணுகிச் செறியும். இதனால் தான் மெய்யுணர்வுடைய வள்ளுவப் பெருமகனார்.
"வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை" என்றார். பின் அதன் முடிவாக, அடுத்த அடியிலேயே “யாண்டும் அஃதொப்ப தில்" என்றார்.
முற்கால மனிதன் நம் அளவுக்குக் கவலைப்பட்டிருக்க வேண்டியது இல்லை. ஏனெனில் அவன் தேவை மிகமிகக் குறைவு. உண்ண உணவு, உடல் மறைக்க உடை, குடியிருக்க வீடு - வாய்ப்புக் கிடைத்தால் ஆடல் பாடல்! இவ்வளவோடு அவன் தேவையை முடித்துக் கொண்டான். 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' என்பது பண்டையோர் மொழி!
-
இன்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பார்க்க வேண்டும்! ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது இல்லை; மேலோட்ட மாகப் பார்த்தாலே போதும். வயிற்றுப் பாட்டுக்கு என்றும், மானங் காப்பதற்கென்றும் பயன்படும் பொருள்கள் தவிர எத்துணைப் பொருள்கள் குவிந்துள? பயன் பொருள்களைப் பார்க்கிலும் பகட்டுப் பொருள்கள் மிகுந்துவிட்டன அன்றோ! பயன் பொருள்களுக்குக் கொள்ளும் கவலையளவு பயன்படாப் பொருள்களுக்கும் கவலைப்பட்டு - கூடுமானால் மிகுதியாகவும் கவலைப்பட்டுப் பணத்தை வீணாக்குவதுடன், அஃதில்லா விட்டால் எவ்வளவு துன்பப்படுகின்றோம். காரணம் என்ன?