184
9
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
வீறிட்டது விம்மித் தாயினிடமே சேர்கின்றது. குழந்தை தாயினிடம் இருக்கும்போது பாட்டி வந்தால் அவளைத் தேடியடைகின்றது. அம்மாவின் அன்பிலும் பாட்டியின் அன்பு மிகுதியாகத் தோன்றுகின்றது குழந்தைக்கு.
தந்தையார் தம் ஓய்வு ஒழிவு நேரங்களில் சிறிதே எடுத்து இன்புறுத்தி மகிழ்கின்றார். தாய் தன் வேலைகளுக்கு இடையே சிலச்சில வேளைகளில் எடுத்து உச்சி முகர்ந்து உவகைகொள்ளுகிறார். உறக்கம், விழிப்பு, விளையாட்டு எல்லா வேளைகளிலும் பாட்டியே பக்கத்திருந்து அன்பு மழை பொழிகின்றார். அதில் நன்றாக நனைந்து நனைந்து குளிர்ந்துவிட்டது குழந்தை! அப் பற்றுதல் அகலுமா? தெய்வம், தாய்மை, இனிமை, அழகு, தூய்மை அனைத்தும் திரண்டு உருண்டு ஒன்றான வடிவம் குழந்தை! அதனை அணைத்தவர் இவ்வனைத்தையும் அணைத்து இன்புற்றவர் ஆகின்றனர். இவற்றுக்கு மாறான பேய்மை, நோய்மை, கொடுமை, கீழ்மை இவற்றைத் தழுவி நின்றோர் அவற்றையே கைம்மாற்றாகப் பெறுவது உறுதி.
இதுகாறும் நாம் கண்டவற்றின் பொதுக் கருத்து என்ன? இன்பமெலாம் இன்பம் செய்தவருக்கே உண்டு. துன்பமெலாம் துன்பம் செய்தவருக்கே வரும்.
எதைநாம் உண்டாக்குகிறோமோ அது நம்மைத் தொடர்கிறது; ஆள்கிறது.
பிறருக்கு இன்பமே செய்துவரும் பெருந்தன்மையாளர்கள் துன்புற்றது இல்லையோ? பிறருக்குக் கேடே செய்து வந்த தீமையாளர்கள் இன்புற்றது இல்லையோ? என்னும் எண்ணங்கள் ஏற்பட முடியும். அஃது இயல்பு!
நாம் நினைக்கிறோம். 'இன்பஞ் செய்தவர்கள்' துன்பம் அடைந்தார்கள் என்று. அவர்கள் தாம் அடைந்ததைத் துன்பம் என்று கருதினார்களா? நாம் நினைக்கிறோம், 'துன்பஞ் செய்தவர்கள் இன்பம் அடைந்தார்கள்' என்று. அவர்கள் தாம் அடைந்ததை இன்பம் என்று கருதினார்களா? இல்லவே இல்லை! அவர்கள் எண்ண நிலைமை மாறாகவே இருந்திருக்கிறது. ஏழைகளுக்குத் தோழராகவும், நோயாளர்க்கு மருத்துவராகவும், சீடர்களுக்குக் குருவாகவும், பொதுமக்களுக்குப் போதகராகவும், மெய்யுணர்வாளருக்குத் தேவகுமாரனாகவும், ஆற்றாமை யாளர்களுக்குத் தேற்றுதல் அளிக்கும் பூஞ்சோலையாகவும்