பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எது அமிழ்து?

துள்ளியோடும் இயல்புடையது மான். அதன் புள்ளிகளின் அழகு பார்ப்பவர்களின் மனத்தை ஒன்றச் செய்யும்; நீண்ட கண்கள் ஓவியர்க்கு விருந்தாம்; அதன் மருண்ட பார்வை கவிஞர்க்குக் கழி பேருவகையாம்! கல்லிலும் குழைந்து விளையாடும் அதன் மெல்லிய சாயல்! புல்லுணவன்றிப் புலாலுணவு கொள்ளா மான் கொடுங்கானில் :அஞ்சி அஞ்சி நடுங்கி வாழும்; ஆணும் பெண்ணும் குட்டியும் கூடி இன்புற விளையாடும் விளையாட்டின்

டையே நொடி நொடி தோறும் அச்சமும் அவலமும் பின்னிப் பிணையும். அருவியின் முழக்கில் அயர்ந்து அதன் சூழலிலே நின்று திளைக்கும் மான், புலியின் உறுமலையும் பாய்ச்சலையும் மறந்து விடுவது இல்லை!

இத்தகைய மான் ஒன்று தன்னைக் கொல்லும் விலங்கின் முன் அச்சமற்று நிற்கின்றது என்றால் நிகழக் கூடியதா? பகை விலங்கின் காற்றடித்தாலே பதைத்தோடும் மான் பக்கத்தே நிற்கின்றது என்றால் நம்பக் கூடியதா? நம்பக் கூடாததுதான்! இருந்தாலும், நம்ப முடியாததும் உலகில் நடப்பது உண்டு அன்றோ!

செந்நாய் கொடிய விலங்கு; அதனை மான், கண்ணால் பார்க்க வேண்டாம்; காதால் அதன் குரலைக் கேட்கவும் வேண்டாம். அதன் ‘மணம்' அடித்தாலே போதும்! துள்ளி ஓடி மறையும்! ஏன்? மானை விடாது துரத்திச் சென்று மாட்டிக் கொல்வதில் வல்லது செந்நாய்!

ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குப் பேரின்பம் அல்லவா! கலைந்து ஓடும் மானைக் கண்டால் குலை பதறத் தாக்காமல் விடுமா செந்நாய்?

இச் செந்நாயின் நாக்கு நீளமானது; விரைந்து ஓடி வியர்த்து நின்றால் நீர் ஒழுக்கிச் சொட்டும்; அந்நீரைப் பருகும் ஆவலால் நிற்கிறது மான் - மெல்லிய பெண் மான்.

ஏன்?