பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

கல்வி அதிகாரத் தொடக்கத்திலேயே முதற் பாடலிலேயே காட்டுகின்றார். அக்குறள் இந் நாற்பது பாடல்களுக்கும் தனி மணியாக இலங்குகின்றது என்பதில் ஐயமில்லை. திருக்குறள் நூலின் பயன்மிக்க முடிவு தேங்கிக் கிடக்கும் இடம் இதுவே என்றாலும் தகும்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

99

என்பது அத்திருப்பாடல்.

கற்க என்று வேண்டினார், “எவ்வாறு கற்க வேண்டும்?” என்று ஒருவர் வினவுவதாகத் தம்மைத் தாமே வினவிக்கொண்டு 'கசடற' என்று விடை விடையளித்தார். நூல்களோ விரிந்துள; அவற்றுள் கருத்துக்களோ பல்கியுள; கற்பவர் வாழ்நாளோ சுருங்கியுள்ளது! கற்குங் காலத்தும் ஐயமும், மயக்கமும் ஆங் காங்கு ஏற்படுகின்றன. சூழ்நிலைகளும், அலுவல்களும் தடை போடுகின்றன. இவற்றை யெல்லாம் விரிவாக ஆராய்ந்தார். அதன் முடிவாகப் பழைய இரண்டு சொற்களுடன் 'கற்பவை' என்ற ஒரு சொல்லையும் சேர்த்துக் கொண்டார். அப்பொழுது 'கற்க கசடறக் கற்பவை' என்ற அளவில் நின்றது. கற்பதும் குற்றமில்லாமல் கற்பதும் - கற்க வேண்டியவற்றைத் தேடி ஆராய்ந்து கற்பது எதற்காக என்னுங் கேள்வி அவர்களுக்கு உளதாயிற்று. அதற்கு விடையாக 'நிற்க அதற்குத் தக' என்னும் முடிவுக்கு வந்தார். அவர் வந்த முடிவுக்குக் கற்போர் வருவதே நலம்பயப்பதாம்.

கற்றவர் கடன் இன்னது எனக் காட்டிய வள்ளுவர்,தம் நூலையோ பிற நூல்களையோ கற்றதன் பயனைக் கூறாமல் ஒதுங்கிச் செல்லவில்லை. ஏனெனில், பயன் கருதி வாழ்வோரே உலகில் மிகுதியானவர்கள். பயன் எதுவும் இல்லை என்றால் அந்தப் பக்கம் தலையெடுத்துப் பார்க்கவே மாட்டாதவர்களும் உளர் என்பதை அறிவார். இத்தகையவர்களையும் இழுக்க வேண்டும். ஆனால் உண்மையாகவும் இருக்கவேண்டும். ஆதலால், ஒரு கேள்வி போடுகின்றார்: "கற்றதனால் ஆய பயனென் கொல்?"

தம் கேள்வியை நூலின் தொடக்கத்திலேயே போடு கின்றார். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்முதற்றே உலகு" என்று நூல் தொடங்கிய அந்த அறிஞர் பெருமகனார்