பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் 9

ஒருவர் செல்வ நிலை கண்டோ, அவர் பிறருக்கு வழங்குவது கண்டோ, வாங்குவது கண்டோ அழுக்காறு கொண்டதால் அவனுக்கு ஆவது என்ன? இவன் பொறாமைப் படுவதால் அவர்களுக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டு விடுமா? இக்கெட்டவன் எண்ணமே அவர்களைத் துன்புறுத்த வல்லதாயின், அந் நல்லவர்கள் எண்ணம் இவனை எப்பாடு படுத்த வல்லது?

பெரும்பொருள் இழப்பு ஏற்படுகிறது; அதைப் பொறுக்க முடியாமல் போகலாம்.

தீரா வலி வருகின்றது: அதனைப் பொறுக்க முடியாமல் ஆகலாம்.

மானக் கேடு வருகின்றது; அதைப் பொறுக்க முடியாமை ஏற்படலாம்.

உயிர்த் தொடர்புடையார் இறக்கின்றார்; அதைப் பொறுக்க எவ்வழியாலும் இயலாமை நேரலாம்.

ஆனால், அடுத்தவன் செல்வத்திலோ புகழிலோ ஓங்குவதைக் கண்டு பொறுக்க முடியாது ஏன் போக வேண்டும்? தன்னால் இயலாத செயல்களை அவனேனும் செய்கின்றானே; தன்னைப் பின்பற்றி வருமாறு வழிகாட்டுகின்றானே; என்று நெஞ்சார வாழ்த்த வேண்டியது இருக்க, பொறுக்க முடியாமல் பொறாமைத் தீயை வளர்த்து ஏன் தன் குடியைச் சுட்டெரிக்க வேண்டும்?

எவ்வளவு சொன்னாலும், வாய்ப்பனைத்தும் இழந்துவிட எண்ணிக்கொண்டு இருப்பவன் ஏற்பானா, பழி மூட்டையைப் பாவக் கிடங்காய்ப் போக உறுதி கொண்டவன் பிறர் நல்லுரைகளைச் செவியில் போட்டுக் கொள்வானா?

மயிர்க்கால்கள் தோறும் தைத்து ஊடுருவுமாறு சொல்லம்பு தொடுத்தார் வள்ளுவராம் வில்லாளி! அதன் தைப்புக்கு உணர்ச்சி கொள்ளாது மரத்தவன் மரத்தவனே! நாம் என்ன புதிதாகச் சொல்வது; அவர் சொன்னதையே சொல்லி முடிக்க வேண்டியது தான்!

“கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிக் கெடும்.”