பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 அ.ச. ஞானசம்பந்தன்



சமயத்தவர் என்று கூறும் மரபு மிக நீண்ட காலமாக இருந்து ஓரளவு வேரூன்றிவிட்டது. ஆராய்ச்சி மிகுந்த இக்காலத்திலுங் கூட இவரைச் சமணர் என்று சொல்லுவதற்குச் சான்றுகள் ஏதேனும் உண்டா என்று பாராமல் பல ஆராய்ச்சியாளர்களும் இதை ஒரு நிரூபிக்கப்பட்ட செய்தியாகவே கொண்டு பேசி வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை சில காலமாகவே இப்பிரச்சனை மனத்தில் ஒரு நெருடலைத் தோற்றுவித்து வளர்த்துவிட்டது. சிலப்பதிகார நூலில் எல்லாத் தெய்வங்களும் சிறப்பித்துப் பேசப்படுகின்றன. காவிரிப் பூம்பட்டினத்தைப் பொறுத்தவரை அருகன் கோட்டம் முதல் ஐயை கோட்டம் வரை பல கோயில்கள் இருந்ததாகப் பேசப்படுகிறது. நூல் முழுவதையும் நன்காராய்ந்தால், திருமால் பற்றி எண்பத்தி ஒன்பது (89) இடங்களிலும், அருகன் பற்றி ஐம்பத்தி ஒன்பது (59) இடங்களிலும், சிவபெருமான் பற்றி முப்பத்தி ஆறு (36) இடங்களிலும், முருகன் பற்றி இருபத்தொரு (21) இடங்களிலும் பேசப்பட்டுள்ளதைக் காணலாம். இங்குக் குறிப்பிடப்பட்ட எல்லா இடங்களிலும் இத்தெய்வங்களைப் புகழ்ந்து பேசும் - சொற்கள் ஆசிரியருடைய கூற்றுக்கள் என்ற முடிவிற்கு வரத் தேவையில்லை. மிக மிகப் பெரும்பான்மையான இடங்கள் பாத்திரங்களின் கூற்றுக்களாகும். கவுந்தியடிகள் கூற்றாகப் பன்னிரண்டு (12) இடங்களும் சாரணர் கூற்றாக நாற்பத்தியேழு (47) இடங்களும் அருகன் புகழ் பேசுகின்றன. ஆய்ச்சியர்கள் கண்ணனையும் நாராயணனையும் இராமனையும் புகழ்ந்து பேசுகின்றனர். குன்றக் குறவர் முருகனைப் புகழ்ந்து பாடுகின்றனர். வேட்டுவ வரியில் கொற்றவையின் புகழ் பேசப்படுகிறது.