பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அ.ச. ஞானசம்பந்தன் 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”என்ற அந்த ஒரு குறளுக்குத்தானே கண்ணகியினுடைய வாழ்வு இலக்கியமாயிற்று. திங்களைப் போற்றத் தொடங்கிக் கண்ணகியைக் கடவுளாக்கிய வரையில் வையத்துள் அவள் வாழ்வாங்கு வாழ்ந்த வகையும், அதன் பயனாக அவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட வகை யுந்தான் கூறுகிறார் அடிகள். தானே தெய்வத் தன்மை அடைந் தாள் என்று கூறினாலும் அவளுடைய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்ட சிறப்பால் அதையும் அவள் பெற்றாள். ஆனால், பிறர் அதை உணர்ந்து, இத்தகைய சிறந்த வாழ்க்கை வாழ்ந்த காரணத்தினால் இவள் வானுறையும் தெய்வத்துள் வைத்து எண்ணப்படத் தகுந்தவள் என்று கருதினார்களே - அன்றுதொட்டுப் பத்தினி வழிபாட்டைத் தமிழர்கள் மேற் கொண்டனர். இந்த இரண்டு கருத்தும் அந்த ஒரு திருக் குறளிலிருந்து கிடைப்பனவல்லவா? வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் கண்ணகிக்கு முன்னர் உண்டா? இருந்திருக்கலாம். இவர்கள் வாழ்வில் ஒப்புநோக்குதல் மூலமாக, ஒரளவு வேறுபாடு காணமுடியும். ஆனால், முற்றிலும் அந்த இலக்கணத்திற்குப் பொருத்தமான இலக்கியமாக அமைந்தது இந்தப் பெருமாட்டி யினுடைய வாழ்க்கைதான். "வாழ்வாங்கு வாழ்பவன்” என்று ஆண்பாலாலே குறிக்கப்பட்டாலும், பெண்ணாயிருந்த ஒருத்தி தெய்வத்துள் வைக்கப்பட்டாள் என்றால், இதைவிட வள்ளு வருக்குப் பெருமை தரக்கூடியது வேறு ஒன்றும் இராது. வள்ளுவர் தந்த சலவைக் கல்லை ஒப்பற்ற ஒரு தெய்வமாக வடித்துத் தந்த பெருமை வேறு யாரிடத்தில் நாம் காண முடியும்? கற்பனை என்பது, நாகர் மலைகளிலே வாழுகின்ற மலைச் சாதியார்களுக்கும், உத்தரப்பிரதேசத்திலே வாழ்கின்ற நாகரிகம்