பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 அ.ச. ஞானசம்பந்தன் எவ்வளவுதான் மனிதனுடைய அறிவு விசாலப் பட்டாலும், அனுபவம் அகன்று சென்றாலும், செயல்படுகின்ற திறமை வலிமையுற்றாலும், இறுதியில் அவனையும் அறியாமல் ஆட்டிப் படைக்கின்ற சக்திகள் சில உண்டு. அவற்றின் கட்டளைக்கு இணங்கித்தான் மனிதன் வாழவேண்டுமென்ற ஒரு சூழ்நிலை அல்லது நியதி உள்ளது. எங்கே நீ சுற்றி வந்தாலும், அந்த நியதி உன்னை விடப்போவதில்லை என்று ஒரு குறள் பாடியுள்ளார். எவ்வளவுதான் அறிவின் துணை கொண்டு சுற்றி வந்தாலும் "மற்றொன்று குழினும் தான் முந்துறும்” என்ற அந்த ஒரு குறளைப் பின்னிப் பின்னிக் காட்டுகின்றார் இளங்கோ என்றாலும், நீதி நூலுக்கும் காப்பிய நூலுக்கும் உள்ள அழகிய வேறுபாட்டினைக் காணவேண்டும். சலவைக் கல்லை ஒர் இடத்தில் அடுக்கி வைத்துப் பார்ப்பதைப் போலாகும் நீதிநூலைப் படிப்பது என்பது முன்னரே கூறப்பெற்றது. ஆனால், அந்தச் சலவைக் கல்லை அழகானதொரு கோபுரமாகவோ, சிலை யாகவோ வடித்துக் காண்பதாகும் காப்பியம் கல்லைக் கானும் பொழுது அதைக் கொண்டு என்ன என்ன செய்யக் கூடும் என்ற உண்மையைக் கலைஞன் ஒருவன் தான் அறிய முடியும். நம் போன்றவர்களுக்கு அது விளங்காது. ஆகவே, மற்றொன்று சூழினும், தான் முந்துறும் என்ற குறளைச் சட்டமாக வகுக்கும் பொழுது அதனுடைய ஆழம் எவ்வளவு தூரம் என்பது நமக்குத் தெரிவதில்லை. ஆனால், அந்தச் சட்டத்தை எடுத்துப் பயன் படுத்தும் வழக்கறிஞனும் அந்தச் சலவைக் கல்லை எடுத்துச் சிலை செய்து தருகின்ற கலைஞனும் தம் செயலை முடித்தபோது தான் அதன் முழு அழகையும் நாம் அறிய முடியும், விதியினுடைய வன்மையைப் பற்றிப் படிக்கலாம் ஒரளவு அறிந்தும் இருக்கலாம். ஆனால், காப்பியத்தில் புலவன்-அதைப் பயன்படுத்தும்பொழுது, அதனுடைய தன்மையே வேறாகிவிடுகின்றது.