பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அ.ச. ஞானசம்பந்தன் காலத்தில் வெள்ளியம்பலம் இருந்ததாகக் கூறமுடியாது. அதனால் செங்குட்டுவனிடமிருந்த சாத்தன் தான் வெள்ளி யம்பலத்தில் தங்கியிருந்ததாகக் கூறவேயில்லை. அவ்வாறிருக்க அந்தப் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு பாடும் பதிக வாசிரியர் வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன் என்று சாத்தனைப் பேச வைக்கின்றார். இதன்படி பார்த்தால் பதிக வாசிரியர் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்கு பிற்பட்டவர் என்று நினைப்பதில் தவறில்லை. நூலில் வரும் சாத்தன், கண்ணகி வரலாற்றைக் காட்சிக் காதையில் 67ஆம் அடி முதல் 92ஆம் அடி முடியக் கூறுகிறான். இக்கூற்றில் மதுராபதித் தெய்வம் வந்து கண்ணகியிடம் பேசிய குறிப்பு எதுவுமில்லை. அப்படியிருக்கப் பதிக ஆசிரியன் கூறும் சாத்தன் மதுராபதித் தெய்வம் வந்து கண்ணகியிடம் பேசியதை விரிவாகப் பேசுகிறான். காப்பியத்திலுள் காட்சிக் காதையில் 19ஆவது அடியில் யாரை நீ என்பின் வருவோய்' என மதுராபதித் தெய்வத்தைக் கண்ணகி கேட்டதாகக் காண் கிறோம். இதற்கு முதலாவதாக உள்ள அழற்படு காதையின் இறுதி அடிகள் வருமாறு : ஆரஞர் உற்ற வீரபத்தினி முன் கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுரா பதியென் (அழல். 155) என்றுள்ள அடிகளின் பொருளைப் பதிக ஆசிரியர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. பெருந்துயருற்ற வீரபத்தினி யாகிய கண்ணகியின் எதிரே (முன்) தோன்றிய கொதிக்கின்ற அழல் போன்ற அவள் கற்புத் தீயின் வெம்மையைப் பொறுக்க மாட்டாது பின்னர் வந்தாள் என்பது பொருளாகும். இதை உறுதிப்படுத்தவே காட்சிக் காதையில் 19ஆவது அடியில் என் பின்னர் வருகின்ற நீ யார் என்று கண்ணகி கேட்டதாகக் கவிஞர் பாடிச் செல்கிறார்.