பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அ.ச. ஞானசம்பந்தன் கூறுகிறார். இவ்விரண்டையும் நோக்கும் இடத்து வேட்டுவ வரி என்ற பகுதி காப்பிய வளர்ச்சிக்கோ கட்டுக்கோப்புக்கோ ஒரு சிறிதும் உதவவில்லை என்பதையறிய முடிகிறது. வெயில் கொடுமைக்காக ஐயைக் கோட்டத்தில் தங்கி இருந்தபொழுது இன்று முதல் இரவுப் பயணம் செய்யலாம் என்று கவுந்தியடிகள் கூறுகிறார். அதையேற்றுக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் தங்கியிருக்கின்ற பொழுது ஏதோ ஒரு நிகழ்ச்சி இடைப்பிறவரலாகவே உள்ளது என்பதை எளிதாக அறி முடியும். வேட்டுவ வரியை எடுத்துவிட்டால் காப்பிய வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அவ்வாறானால் வேட்டுவ வரியில் உரைப்பாட்டு மடையில் 74 அடிகளும், வேடுவர் வாழ்க்கை கூறும் முகமாக ஒவ்வொரு பாடலும் நான்கு வரிகொண்ட 24 பாடல்களும் இடம்பெற வேண்டிய அவசியம் என்ன? இந்த வினாவிற்கு எளிதாக விடை கூற முடியாது. காப்பிய வளர்ச்சிக்கு ஒரு சிறிதும் உதவவில்லை என்று தெரிந்திருந்தும் இப்பகுதியை ஆசிரியர் பாடியுள்ளார் என்றால் அவருடைய மனத்தில் ஆழமான வேறோர் கருத்து இருந் திருக்க வேண்டும். உரைப்பாட்டுமடையில் நடைபெறுகின்ற நிகழ்ச்சி நம் மனத்திற்கொண்டு வரவேண்டும். கோவலன், கண்ணகி கவுந்தியடிகள் ஆகிய மூவரும் கோயிலின் ஒரு புறத்தில் நிழலுக் காகத் தங்கியிருக்கின்றனர். மற்றொரு புறத்தில் வேடுவர்கள் வந்து தங்கி தம் கூட்டத்துள் ஒருத்திக்குக் கொற்றவை வேடம் அணிவிக்கின்றனர் வேடம் அணியப்பெற்ற பெண் உடனே தெய்வம் உற்றவளாய்க் கண்ணகியைப் பார்த்து பின்வருமாறு பேசினாள். -