பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அ.ச. ஞானசம்பந்தன் இந்த அன்புடைமை, உயிர்கள் மாட்டு இரக்கம், பிறர் பிழை பொறுத்தல், தனக்குச் செய்யப்பட்ட கொடுமை அல்லது தீங்கு முதலியவற்றை மறந்து, செய்தவர்களிடம் அன்பு பாராட்டல் ஆகியவையே துறக்கத்தின் திறவு கோலாகும். இந்த ஒன்று கண்ணகியிடம் இருந்தது என்பதைக் காட்ட அடிகள் இரண்டு இடங்களைப் பயன்படுத்துகிறார். தனக்குப் பெருந்திங்கு இழைத்த கோவலன் மீண்டு வந்து இலம்பாடு நானுத் தரும் என்று கூறிய பொழுது கூட அவன் மாட்டுக் கடுகளவுகூட சினமோ, வெறுப்போ கொள்ளாமல் அன்புடன் இருந்தாள் என்பதைக் காட்ட அடிகள் கூறும் இரண்டடிகள் இவை : 'நலங்கேழ் முறுவல் நகை முகங் காட்டிச் சிலம்புள கொண்ம்' முதலடியில் உள்ள அனைத்துச் சொற்களும் ஆழமான பொருளுடையன. முறுவல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு எள்ளி நகையாடுதல் என்பது பொருளாகும். நகை தோன்றுவதற்கு நான்கு நிலைக்களன்களைத் தொல்காப்பியனார் கூறுகிறார். அவையாவன: எள்ளல், இளமை, பேதைமை மடன் என்ற நான் காகும். கண்ணகியின் முறுவல் எள்ளல் அடிப்படையில் வந்தது அன்று என்பதைக் குறிக்க நலங்கேழ் முறுவல் என்றார். நலத்தோடு பொருந்திய முறுவலும் அல்லது நலஞ் செய்கின்ற முறுவலும் அன்புடையார் கண்ணே தோன்றுவதாகும். நகை முகம் என்ற வழி நகை தோன்ற நிலைக்களமாக இருந்தது இளமையாகும். இளமை பற்றி வந்த இந்த நகை எந்த நிலையிலும் எத்தகைய துன்பத்திலும் அவளை விட்டு நீங்க வில்லையென்பார் நகை முகம் என்றார். எப்பொழுதும் புன்னகையோடு கூடிய கண்ணகிக்கு கோவலன் மாட்டுக் கொண்ட அன்பின் காரணமாக முறுவல் பிறந்தது என்றார். முறுவலும் நகையும் முகத்திற்கு என்றுமுள்ள அணிகளாகும்.