பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோ அடிகள் சமயம் எது? 63 காட்டினோம். இரண்டாம் பகுதியில் அவரால் படைக்கப் பெற்ற காப்பியத்தில் காப்பியத் தலைவனாகவும் தலைவியாகவும் வரும் கோவலனும் கண்ணகியும் சமண சமயத்தவர் அல்லர் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே என்றோ இருந்த பெயர் தெரியாத ஒருவர் பாடிய பதிகத்தை வைத்துக் கொண்டு இளங்கோவடிகளைச் சமணராக்குவதன் பொருத்த மின்மையை நன்கறியலாம். அடிகள் வெளிப்படையாகத் தம் சமய ஈடுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டவில்லை என்றாலும் வேட்டுவ வரி ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவர் சாக்தராக இருக்கலாமோ என்று ஐயப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. காப்பிய மாந்தராகிய கோவலனும் கண்ணகியும் வேத வழிப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள்; அவசியம் நேர்ந்த பொழுது கோவலன் பாய்கலைப் பாவை மந்திரம் சொல்கிறான். கணவனை இழந்த கண்ணகியிடம் மதுராபதித் தெய்வம், கொற்றவை, அங்கயற்கண்ணி வந்து பேசுகின்றன. இவை யனைத்துக்கும் - இத்துணைச் சான்றுகளுக்கும் - எதிராக சாவக நோன்பிகள் மட்டும் வைத்துக் கொண்டு இவ்விரு வரையும் சமணராக்குவது பொருந்தாது என்று சொல்லத் தேவையில்லை. இதுகாறும் கூறியவற்றிலிருந்து இளங்கோ, கோவலன் கண்ணகி என்ற மூவரும் வேறு எந்த சமயத்தைச் சார்ந்திருப் பினும் இருக்கலாம். ஆனால் உறுதியாக இவர்கள் யாரும் சமணர் அல்லர் என்பது தெளிவாகும்.