பக்கம்:இளந்தமிழா.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மானுடம்

காரிகைக் கெட்டாக் கவிதையின் வடிவாய்த்
தாரகை ஒன்று தரணியைப் புதிதாய்க்
காணவே விழைந்து கணக்கிலா ஆண்டுகள்
வானமாம் வெளிதனில் பயணமாய் வந்து
மணியொளிக் கரங்களால் வையகம் தழுவி
உணர்விழந் தின்பமாம் ஊற்றினில் திளைத்து,
"காதலீ, உன்றனைக் கண்ணுறப் பலயுகம்
சோதனை யனைத்தையும் துடைத்தே வந்துளேன்"
என்றதும் உலகம் இளகிக் குழைந்து
தென்றலில் சிலிர்க்கும் மலரென நின்றது-
சொல்லடங் காததோர் சுகமவை பெற்று
மெல்லவே ஆடின வானமாம் வீதியில்-
நள்ளிர வதனில் நடந்த இவ் விந்தையைத்
தெள்ளிய உணர்வுடைப் புள்ளினம் கண்டன:-
ஆண்டுகள் பலவாய் அவ்வொளிக் கைகளும்
நீண்டே உலகினைத் தழுவிட நினைந்தே
வருவதைப் போலவே பருவமாம் மாரியில்
பறவையின் இனங்கள் தொலைநெடும் பயணம்
நாடுகள் மலைகள் நலமுடன் கடந்து
ஏடுகள் பயிற்றிடா இனியநல் லுணர்வுடன்

131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/133&oldid=1359755" இலிருந்து மீள்விக்கப்பட்டது