பக்கம்:இளந்தமிழா.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விண்ணப்பம்

அகந்துயர் உண்டிட அவலமே ஆயினர் திகழொளி வதனமும் சீர்குலைந் திட்டார்: நெற்றியில் வந்ததே ஒற்றைக் கீரலும்; சுற்றியென் உளத்தினில் சுவைத்திடு நகையும் இழந்தனர். அந்தோ! இறைவனே இவற்றால் உழந்துநா னிருக்க உற்றதோர் பேரிடி சென்றதோர் இரவினில் சிறிதும் துயில் கொளாது என்றனூழ் வினையினை எண்ணியே கிடந்தேன்; தூங்கினர் கணவர் சோர்வுடன்; அறியாது ஆங்கொரு சுடுசொல் அவர்வாய்ப் பிறந்தது: 'இவளால் என்றன் இன்பந் துறந்தேன்; கமலா, உன்றன் காதலும் இழந்தேன்’ என்றனர் ஐயகோ இதயம் வெடித்திட பொன்றின உளத்துள் பொதிந்த என் கனவெலாம் என்னநான் செயினும் என்பால் அவர்க்கு மன்னிய காதல் வரஇனி வழியிலை; வேற்றொரு மங்கையை விரும்பியே என்பதி ஆற்றொணா ஏக்கத் தழுந்தினர் அறிந்தேன். நாதன்நல் லின்பமே நங்கையர்க் கின்பமாம். பேதைநான் அவர்க்கும் பீடையாய் வந்துளேன். இறந்தனன் எனினும் உளந்தனில் என்றும் மறந்தறி யாதஅம் மங்கையை மணப்பர். இனியெனக் குலகினில் என்னிருக் கின்றது? பனிமதிச் சடையாய் பரிவுடன் ஏழையை இணையடி மலர்களில் ஏற்றருள் வீரே; கணவர் இன்புறவே கனிந்தருள் செய்வீர்; இன்னுமோர் பிறவி இருந்திடில், என்னுடை நாதனோ டினிதுறப் புரிகவே,

          58
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/60&oldid=1359814" இலிருந்து மீள்விக்கப்பட்டது