ராகவன் : அவனைப்பற்றி உனக்கென்ன கவலை?
சரோஜினி : நாம் பங்களாவுக்குள் இருக்கும்போது ஒரு வேளை அவர் திரும்பி வந்துவிட்டால்?
ராகவன் : அவன் இப்போது வரமாட்டான். வாசுதேவன் வீட்டில்தான் இருப்பான்.
சரோஜினி : நாம் இரண்டு பேரும் உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடுவது நல்லது.
ராகவன் : எதற்காக அப்படிப் பயப்படுகிறாய்?
சரோஜினி : நான் உயிரோடிருப்பதாக அவர்களுக்குத் தெரியக்கூடாது. தெரிந்தால் உங்கள்மேல்...
ராகவன் : என்ன என்ன செய்ய முடியும்?
சரோஜினி : மாலதியிடம் வாங்கிய பணம்?
ராகவன் : அதைப்பற்றி வாசுதேவன் வெளியில் சொல்லவே விரும்ப மாட்டான். போலீசில் அவன் பிராது கொடுத்தால் அவனுடைய கெட்ட நடத்தை வெளியாகிவிடும்.
சரோஜினி (கெஞ்சிய குரலில்) : ராகவன், நான் சத்தியமாகச் சொல்லுகிறேன். வாசுதேவன் எவ்விதமான கெட்ட நடத்தையும் உடையவரல்ல. என்னைப் பற்றியும் நீங்கள் சந்தேகிக்கக் கூடாது.
ராகவன் : பிறகு அவனுக்கு உன் வீட்டில் என்ன வேலை? இங்கே அவன் எதற்காக வந்தான்?
சரோஜினி : நான்தான் அவர் உதவியை நாடினேன்.அவரும் இன்றுதான் முதல் தடவையாக வீட்டிற்கு வந்தார்.