பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. உடன்பிறந்தார் சுற்றத்தார்

நான் தனியாகப் பிறந்தேன். கூடப்பிறந்த ஆணோ, பெண்ணோ கிடையாது. பிறந்தவனே நான் ஒருத்தன்தான். யாரும் பிறந்து இறக்கவும் இல்லை. எங்கள் வீட்டில் குழந்தைகள் பிறந்து இறக்கும் நிலை என்றைக்கும் கிடையாதாம். எனவே எனக்கு உடன் பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது. என்றாலும் என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உடன் பிறந்தவர்கள் இருந்தனர். ஆனால் ஒருவரும் எங்கள் குடும்பத்துக்கு உதவி செய்தது கிடையாது. எனது அப்பாவுடன் பிறந்த பெரியப்பா வீட்டில் நான் ஒரு நாளாவது சாப்பிட்டதோ சிற்றுண்டி கொண்டதோ கிடையாது. இத்தனைக்கும் அவர்கள் நான் வாழ்ந்த அதே ஊரில்தான் இருந்தார்கள். அவர்கள் எனக்குச் சாப்பாடு போடாவிட்டாலும், வசைமொழி வாரிவழங்கியதை அறிவேன். எத்தனையோ நாள் என்னையும், என் அன்னையையும், பெரியப்பாவும் அவர்தம் பிள்ளைகளும் வசை மொழியால் வாழ்த்தியது நினைவிருக்கின்றது. எனது தந்தையார் அவர்கள் குடும்பத்தை விட்டுப்பிரிந்து வந்து விட்டமையாலும் அவர் குடும்பப் பொறுப்பை நன்கு கவனிக்காமையிலுைம் அவர் உடன் பிறந்தவர்களோடு அதிகமாகக் கலந்து வாழவில்லை என்னலாம். என் அப்பாவுடன் பிறந்த அத்தை ஒருவர் பதினைந்து கல் தொலைவுக்கு அப்பால் வாழ்ந்து வந்தார். நான் எப்போதாவது அங்கே செல்வேன். இரண்டொருநாள் தங்குவேன்; அவர்கள் வந்து ஒரிரு வேளை தங்கிச் செல்வார்கள்; அவ்வளவுதான். அவர்களோடு நான் அதிகமாகப் பழகியது கிடையாது.