பக்கம்:இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை பெரியார்

போராட்டம் நடந்தது. அது இந்தி எதிர்ப்புப் போராட்டம். பெரியார் தலைமையில் தமிழ் மக்கள் யாவரும் ஒன்று கூடி இந்தியை எதிர்த்தார்கள்.

காங்கிரஸ் காரர்கள் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்கள். இதனால் மற்ற தாய்மொழிகள் வளர்ச்சி குறையும். அந்த மக்கள் பின் தங்கியவர்கள் ஆவார்கள். இதை காந்தியார் போன்றவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. திரு ராசகோபாலச்சாரியார் அவர்கள் சென்னை மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது. இந்தியைக் கட்டாயம் எல்லாரும் படிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். இதைத் தமிழ்நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் எதிர்த்து வந்தார்கள்.

திருச்சியில் பெரிய இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. நாவலர் பாரதியார் தலைமையில் அந்த மாநாடு நடந்தது.

அந்த மாநாட்டில் பெரியார் தலைமையில் தமிழ்மக்கள் அனைவரும் ஒன்றாகி இந்தியை எதிர்ப்பது என்று முடிவு செய்யப் பட்டது. பள்ளிக் கூடங்களின் முன் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளியிலிருந்து 100பேர் இந்தியை எதிர்க்கப் புறப்பட்டு வந்தார்கள். அவர்களை வழியனுப்பி வைத்து பிறகு பெரியார் தாமும் சென்னைக்கு வந்து சேர்ந்தார். சென்னைக் கடற்கரையில் எழுபதினாயிரம் தமிழ் மக்கள் ஒன்று கூடினார்கள். பல தலைவர்களும், பெரியாரும் இந்தியைப் புகுத்துவதைக் கண்டித்தும், அதனால் ஏற்படும் கேடுகளை விளக்கியும் பேசினார்கள்.

46