பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒரு பிடி கடுகு

13

குடும்பந் தோறும்‌, நாடு தோறும்‌, ஊர்‌ தோறும்‌ இருக்‌கிறவர்‌ தொகையை விட, இறந்தவர்‌ தொகைதான்‌ அதிகம்‌ என்பதை அறிந்து கொண்டேன்‌.”

கெளதமை இயற்கைச்‌ சட்டத்தை அறிந்து கொண்டது மட்டும்‌ அல்லாமல்‌, அதற்கு மேற்பட்ட நல்ஞானத்தையடையும்‌ செவ்வியடைந்திருப்பதையும்‌ பெருமான்‌ புத்தர்‌ அறிந்தார்‌. ஆகவே, அவர்‌ இவ்வாறு அருளிச் செய்தார்‌:

“சாவு என்பது உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத சட்டம்‌. அதனை மீற முடியாது. இயமன்‌ என்னும்‌ அரசன்‌, சாவு என்னும்‌ ஆணையைச்‌ செலுத்தி, அரசியல்‌ நடாத்துகிறான்‌. அந்த ஆணையை, உயிர்களால்‌ மீற முடியாது. மக்கள்‌, மாடு, மனை முதலிய செல்வங்களில்‌, மனஞ்‌ செலுத்தி மகிழ்ச்சி கொண்டு, செய்ய வேண்டிய முயற்சிகளைச்‌ செய்யாமல்‌ மனிதர்‌ இருப்பாரானால், தூங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டைப்‌ பெருவெள்ளம்‌ அடித்துக் கொண்டு போவது போல, அவரைச்‌ சாவு அடித்துக் கொண்டு போய் விடும்‌.”

இவ்வாறு, பெருமான்‌ புத்தர்‌, நிலையாமையையும்‌, சாவையும்‌ சுட்டிக் காட்டி, அறநெறியைக்‌ கூறினார்‌. இதனைக்‌ கேட்ட கெளதமை, புத்தரை வணங்கித்‌ தான்‌ பெளத்த சங்கத்தில்‌ சேர்ந்து, துறவு நெறியில்‌ செல்லத்‌ தன் மீது திருவுளம்‌ கொண்டருள வேண்டுமென்று வேண்டினாள்‌. பெருமான்‌ அவளைப்‌ பிக்குணிச்‌ சங்கத்திற்கு அனுப்பித்‌ துறவறத்தில்‌ சேர்ப்பித்தார்‌.

துறவு பூண்ட கெளதமையார்‌, புகழ்பெற்ற ஏழு புத்த மதப்‌ பெண்மணிகளில்‌ ஒருவராக விளங்கி, இறுதியில்‌ வீடு பேறடைந்தார்‌.