பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே

21

உடுக்கவும்‌ பெற்று, நுகர்ந்து வருகிறார்‌. ஆனால்‌, இந்தப்‌ பிறப்பில்‌, இப்போது புதிதாகத்‌ தான, தருமம்‌ செய்து, புதிய நல்வினையைச்‌ சேர்த்துக் கொள்ளவில்லை. ஆகவே, பழைய வினையின்‌ பயனை நுகருகிறபடியால்‌, இவர்‌ பழைய சோறு சாப்பிடுகிறார்‌ என்று சொன்னேன்‌. இப்படிச்‌ சொன்னது, எப்படி இழிவு படுத்தியது ஆகும்‌?” என்றாள்‌.

இந்தப்‌ பொருளை அவர்கள்‌ எதிர்பார்க்கவில்லை. அவர்கள்‌ வியப்புடன்‌, “அதற்கு இதுவா பொருள்‌!” என்று கூறி ம‌கிழ்ந்தார்கள்‌. செல்வரைப்‌ பார்த்து, “குழந்தை சொன்னதில்‌, ஒன்றும்‌ குற்றம்‌ இல்லையே!” என்று கூறினார்கள்‌.

அவருக்கும்‌ அப்போதுதான்‌ உண்மை விளங்‌கிற்று. “பழைய சோறு சாப்பிடுகிறார்‌,” என்று கூறியது இழிவு படுத்துவதற்கு அன்று என்றும்‌, அதற்குப்‌ பருப்பொருளை விட நுண்பொருள்‌ இருக்கிறதென்றும்‌ அறிந்தார்‌. “ஆமாம்‌! விசாகை சொன்னதில்‌ தவறு ஒன்றும்‌ இல்லைதான்‌!” என்று சொன்னார்‌. அப்போது விசாகையின்‌ தந்‌தை, அவளுக்குக்‌ கூறிய அறிவுரை நினைவிற்கு வந்தது. அந்த அறிவுரைகளிலும்,‌ ஏதேனும்‌ நுண்பொருள்‌ இருக்க வேண்டும்‌ என்றும்,‌ தாம்‌ அவற்றை எளிமையாக எண்ணியது தவறு என்றும்‌ நினைத்தார்‌. அவற்றின்‌ பொருள்‌ என்னவென்று, அவளைக்‌ கேட்டறிய வேண்டும்‌ என்னும்‌ எண்ணம்‌ அவருக்கு அப்போது உண்டாயிற்று. அவர்‌ கூறினார்:-