பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

கிறபடி, இங்கு நச்சுப்‌ பாம்பு இருக்குமோ! போய்‌ அதைக்‌ கொன்று போடுகிறேன்‌,” என்று பலவாறு நினைத்து, அவன்‌ உழுவதை நிறுத்தித்‌ தாற்றுக்கோலைக்‌ கையில்‌ எடுத்துக் கொண்டு, அவ்விடத்திற்குப்‌ போனான்‌. போனவன்‌, அங்குப்‌ பாம்பைக்‌ காணவில்லை. பொற்‌காசுகள்‌ நிறைந்த பணப்பையும்‌, முத்து மாலைகளும்‌ இருப்‌பதைக்‌ கண்டான்‌. கண்டு திகைத்தான்‌. இதைத்தான்‌, ‘நச்சுப்‌ பாம்பு’ என்று புத்தர்‌ பெருமானும்‌, ஆனந்த தேரரும்‌ கூறினார்கள்‌ என்று அறிந்தான்‌. என்ன செய்வதென்று தோன்றாமல்,‌ தயங்கினான்‌. பிறகு, மண்ணை வாரி அதன் மேல்‌ போட்டு விட்டுப்‌ பழையபடி, ஏர்‌ உழுது கொண்டிருந்தான்‌.

பொழுது விடிந்தவுடன்‌, சிராவத்தி நகரத்துச்‌ செல்வன்‌ மாளிகையில்,‌ எல்லோரும்‌ விழித்துக்‌ கொண்‌டார்கள்‌. மாளிகையில்‌ கன்னம்‌ வைக்கப்பட்டிருப்‌பதையும்‌, பொன்னும்‌, பொருளும்‌ களவாடப்பட்டிருப்‌பதையும்‌ அறிந்தார்கள்‌. கள்வரைக்‌ கண்டு பிடிப்பதற்காகச்‌ செல்வனின்‌ வேலைக்காரர்கள்‌ புறப்பட்டுப்‌ பல திசைகளிலும்‌ சென்றார்கள்‌. அவர்களில்‌ சிலர்‌, நகரத்துக்கு வெளியே வயல் பக்கமாகக்‌ காலடிச்‌ சுவடுகள்‌ இருப்பதைக்‌ கண்டு, அவற்றின்‌ வழியே போனார்கள்‌. கடைசியில்,‌ கள்வர்‌ தங்கியிருந்த வயலுக்கு வந்தார்கள்‌. அங்கு வயலை உழுது கொண்டிருந்த குடியானவனையும்‌, ஒரு புறத்தில்‌ அரைகுறையாக மறைக்கப்பட்ட பணப்‌ பையையும்‌ கண்டார்கள்‌. குடியானவன்‌ மேல்‌ அவர்களுக்கு ஐயம்‌ உண்டாயிற்று. இரவில்‌ களவாடிய பண மூட்டையை வயலில்‌ வைத்து விட்டு, தன்னை யாரும்‌ ஜயுறாமலிருக்க ஏர்‌ உழுகிறான்‌ என்று