பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

இஸ்லாமிய இளைய தலைமுறையினர் இஸ்லாம் தொடர்பான பல்வேறு செய்திகளை அறியவும் தெளிவு பெறவும் உறுதுணையாயமையவல்ல கையடக்க இஸ்லாமியக் கலைக்களஞ்சியமொன்றை உருவாக்க வேண்டுமென்ற பேராவல் பல ஆண்டுகளாக என் நெஞ்சத்தில் கனன்று கொண்டிருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இஸ்லாமியச் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் இளமையில் இஸ்லாம் குறித்துப் போதிய அறிவுத் தெளிவுபெற வாய்ப்பில்லாத நவீன வாழ்க்கைச் சூழலில் வளர்ந்துவர நேர்ந்துள்ளது. இவ்வாறு சின்னஞ்சிறு வயதில் தவிர்க்க முடியா நிலையில் இஸ்லாமிய அறிவைப் பெற இயலாமற் போன அவர்கள் இஸ்லாமியத் தகவல்களைப் படித்தறிய வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டவர்களாக இருப்பதையும் நான் அறிவேன். அவர்கட்கேற்ற எளிய சொல்லாட்சியோடு இனிய நடையில் கையடக்க நூலாகத் தந்தால் அவர்கட்குப் பெரிதும் பயன்படும் என்ற என் உள்ளுணர்வின் விளைவே இந்நூல், அத்துடன் முஸ்லிமல்லாதவர்கட்கும் இஸ்லாமியத் தகவல்களை மொழித் தடையின்றித் தமிழில் படித்தறிய எளிதாக இருக்கும் என்பது என் உள்ளக்கிடக்கையாகும்.

தமிழில் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் இல்லையே என்ற ஏக்கத்தைப் போக்கிய பெருமை பன்னூலாசிரியர் எம். ஆர். எம். அப்துற்- றஹீம் அவர்கட்கு உண்டு. இருபதாண்டுகட்கு முன்னர் அன்னார் உருவாக்கி வெளியிட்ட 'இஸ்லாமியக் கலைக்களஞ்சியங்கள்' மூன்று தொகுதிகள் வரலாற்றுச் சிறப்புடையப் பதிப்புகளாகும். இவ் விளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு அத்தொகுதிகள் மூலாதாரமாக அமைந்தனவெனினும் பொருந்தும், இது போன்ற வழி நூல்கள் பல உருவாக ஆதாரமூல நூல்கள் (Source books) பலவற்றைத் தமிழில் உருவாக்கித் தந்த பெருஞ் சிறப்பும் அவர்களுக்குண்டு. அன்னார் இந்நூலுக்கு அரிய அணிந்துரையொன்றையும் எழுதி வாழ்த்தியுள்ளார்கள். என் முயற்சிகட்கு என்றும் துணையாயமைந்து வரும் பன்னூலாசிரியர் அவர்கள் முப்பது ஆண்டுகட்கு முன்னர் என்னை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தொண்டின் பால் ஆற்றுப்படுத்திய பெருமைக்குரியவர்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முத்திரைப் பணியாற்றி வரலாறு படைத்துவரும் பன்னூலாசிரியர் அல்வராஜ் எம். ஆர். எம். அப்துர்-றஹீம் அவர்களின் அளப்பரிய இஸ்லாமியத் தமிழ்த் தொண்டுக்கு இந் நூலை காணிக்கையாக்குவதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன்.

இந்நூல் செம்மையுறப் பெருந்துணையசயமைந்தவர் பன்மொழிப் புலவர் மௌலவி எம், அப்துல் வஹ்ஹாப் சாஹிப்,எம். ஏ. பி. டிஹெச். அவர்களாவர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலம் தொட்டே என் முயற்சிகளுக்கெல்லாம் வழிகாட்டியாக விளங்கி வரும் மெளலானா அவர்கள்