பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

குளிர்பதனப் பெட்டி

லாம். குடல்வால், அழற்சியின் கடுமையைக் கருத்தில்கொண்டு பாதிப்புக்காளான குடல் வால் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றிவிடலாம். இவ்வாறு செய்வதால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.


குரல்வளை : நாம் ஓசை எழுப்புவதற்கு உறுதுணையாக அமைந்திருக்கும் உடல் உறுப்பு குரல்வளையாகும். இது தொண்டையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கிறது. நாம் உண்ணும் உணவு உணவுக் குழல் வ்ழியாக இரைப்பைக்குச் செல்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்று குரல்வளை வழியாக சுவாசப்பைக்குச் செல்கிறது. அவ்வாறே வெளியிடும் காற்று குரல்வளை வழியாக மூக்கு, வாய் வழியாக வெளியேறுகிறது.

தொண்டையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள குரல்வளை முக்கோண வடிவினதாகும், இம்முக்கோணத்தின் முனையாக 'ஊட்டி’ அமைந்துள்ளது, இப்பகுதி சிலருக்குத் தொண்டைப்பகுதியில் வெளியே சற்று துருத்திக் கொண்டிருக்கும். இதனைச் ‘சங்கு' என்பாரும் உண்டு. -

ஒலி எழுப்ப வசதியாக குரல்வளையில் மெல்லிய தோலிலான இரு நாண்கள் உள்ளன. இவை 'குரல் நாண்கள்’ எனப்படும். சாதாரண நிலையில் இவை சுவாசக் குழாயுடன் துவாரப் பகுதியை கதவு போன்று மூடிக்கொண்டிருக்கும். நாம் பேசாத நிலையில் காற்றை உள்ளே இழுக்கும்போது இவை ‘ப’ வடிவில் விலகி வழிவிடும். ஆனால், நாம் பேசும்போது இக்குரல் நாண்கள் நெகிழ்ச்சியடைகின்றன. இதனால் குரல் வளையின் வாய் சிறியதாகிவிடும். நுரையீரலிலிருந்து வெளிப்படும் காற்று குரல்வளை நாண்களை அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வின் மூலமே ஒலி உண்டாகிறது. ஆனால், இவ்வொலி மெல்லியதாய் இருக்கும். இதைத் தொண்டை, மூக்கு, வாய் முதலிய உறுப்புக்களில் உள்ள காற்றால் பலப்படுத்தி காற்றில் பரவுகிறது.

குரல்வளை நாண்கள் பெண்களைவிட ஆண்களுக்குச் சற்று தடித்திருக்கும். இதனால் ஆண்கள் குரலொலியைவிட பெண் களின் குரல் ஒலி சற்று மென்மையாக இருக்கும். இதே போன்று சிறுவர்களுக்கும் இருக்கும். எனினும், குரல் ஒலியின் தன்மை வாய், மூக்கு ஆகியவற்றின் அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. மெல்லிய ஒலியை வாய் அசைப்பின் மூலம் உண்டாக்க முடியும். உரத்த குரலில் அதிக நேரம் பேச நேர்ந்தால் குரல் நாண்கள் பாதிப்படைகின்றன. இதனால் குரல் கம்மிவிடுகிறது. சளி போன்ற உபாதைகளாலும் குரல் பாதிக்கப்படும்.


குரோமியம் : இது பழுப்பு நிறமுள்ள தனிமம் ஆகும். இதை வேண்டிய அளவு மெருகேற்றலாமேயொழிய கம்பியாக நீட்டவோ, தகடாக அடித்து மாற்றவோ இயலாது. அந்த அளவுக்குக் கடினத்தன்மையுள்ள உலோகமாகும் இது. மற்ற உலோகங்களைவிட இலேசாக இருந்தபோதிலும் அலுமினியத்தைவிட இருமடங்கு எடையுள்ளதாகும்.

1897இல் எல். என். வாகுலின் என்னும் ஃபிரெஞ்சு வேதியல் வல்லுநர் குரோமியத்தை முதலில் கண்டறிந்தார். இதன் அணு எண் 24 ஆகும். குரோமியத்தின் உப்புக்கள் தோல் பதனிடும் தொழிலில் பெருமளவு பயன் படுத்தப்படுகிறது. அநேக மாறுபடும் இணைத் திறனும் உடையது. இதன் உப்பாகிய பொட்டாசியம் டைகுரோமேட் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகப் பயன்படுகிறது.

குரோமியம் தனி உலோகமாக இயற்கையில் கிடைப்பதில்லை. வேறு தனிமங்களுடன் சேர்ந்த கூட்டுக் கலவையாகவே கிடைக்கிறது. அப்போது குரோமியம் பல நிறங்களையுடையதாகக் காணப்படும். பின் வேதியியல் முறையில் குரோமியத்தைத் தனியே பிரித்தெடுப்பர். குரோமியம் துருப்பிடிக்காத உலோகமாகும்.

குரோமியம் பல்வேறு வகைகளில் பயன்பட்டு வருகிறது. பல்வேறு உலோகங்களின் மீது பூச்சுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இப்பூச்சுள்ள உலோகப் பொருள் காற்றில் மங்குவதில்லை. எப்போதும் பார்க்கப் பளிச் சென்றிருக்கும். எனவே, உலோகப் பூச்சுத்தொழிலில் குரோமியம்இன்றியமையாப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. எஃகுடன் சிறிதளவு கலந்தால் மேலும்கடினத் தன்மை பெற்றுவிடும். பளபளப்பு மிகுந்த 'எவர்சில்வர்’ எனும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிக்கப்படுகிறது.


குளிர்பதனப் பெட்டி : கோடை வெயிலின் போது குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பி பானை நீரைப் பருகி மகிழ்கிறோம். இதற்குக் காரணம் பிற பாத்திரங்களில் உள்ள நீரைவிட மண் பானை நீர் குளிர்ச்சி மிக்கதாக இருப்பதே-