பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

செயற்கைக் கோள்

தாவரங்கள் காற்றிலிருந்தும் நீரிலிருந்தும் பெறுகின்றன. இவைகள் மூலம் உருவாகும் சர்க்கரைப் பொருள் கரைக்கப்பட்டு, சாறு வடிவில் உட்கவரப்பட்டு, தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. இவற்றின் பெரும்பகுதி தாவரத்தில் எது வளர்ச்சிப் பகுதியாக அமைந்துள்ளதோ அங்கேயும் எங்கு பழுதான பகுதியுள்ளதோ அங்கேயும் செல்கிறது. இந்தச் சர்க்கரையிலிருந்து சத்தின் ஒரு பகுதி செல்லுலோசாக மாற்றமுறுகிறது. தாவரங்கள் இதைப் புதிய உயிரணுக்களின் சுவர்களை உருவாக்கிக் கொள்ளப் பயன்படுத்துகின்றன.

செல்லுலோஸ் இயற்கையாக உருவாகும் ஒரு பொருளாகும். இதை மனிதர்கள் வேதியியல் முறையில் சோதனைச் சாலையில் உருவாக்க இயலாது. செல்லுலோசை நாம் பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பலனடைந்து வருகிறோம், தாவரங்கள் மடிந்தபின், அதிலுள்ள ஈரப்பசையெல்லாம் உலர்ந்த பின்னர் செல்லுலோசைப் பெறுகிறோம். பருத்தி இயற்கையில் கிடைக்கும் தூய செல்லுலோசுக்கு நல்ல சான்றாகும், பருத்தியை நூலிழைகளாகத் துணி தயாரிக்கப் பயன்படுத்துகிறோம். தூய பஞ்சையோ, சணலையோ நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடனும் நீருடனும் ஆல்கஹாலுடனும் ஈதருடனும் ஒன்றன்பின் ஒன்றாக வினைப்படுத்தி செல்லுலோசைத் தூய நிலையில் தயாரித்துப் பெற முடியும். இவ்வாறு உருவாக்கப்படும் செல்லுலோஸ் படிக உருவமற்ற பொருளாகத் தோற்றமளிக்கும். பலவகையான வேதி வினைப்பொருட்களில் செல்லுலோஸ் கரையும் தன்மை கொண்டது. சான்றாக நாக குளோரைடு கலந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலும் தாமிர ஹைட்ராக்சைடின் அம்மோனியாக் கரைசலிலும் செல்லுலோஸ் கரையும்.

கார்பனாகிய கரிமப் பொருள்களுக்குள் செல்லுலோசே தொழில் துறைகளுக்கு மிகவும் பயன்படும் பொருளாக விளங்குகிறது. பருத்தி மற்றும் சணல் சம்பந்தமான நெசவுத் தொழில் இழை வடிவில் இது பெரிதும் பயன்படுகிறது. காகிதத் தயாரிப்பிற்கும் இது ஏராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடி மருந்துத் தொழிலும் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைப் பட்டுத் தொழிலைப் பொறுத்தவரை செல்லுலோசே அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது. செல்லுலாய்டு எனும் குழைமப் பொருள் (பிளாஸ்டிக்) தயாரிப்பிலும் இதுவே முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளிப்படச் சுருள்கள் (Photofilm}தயாரிக்கவும் செலோஃபேன் தாள் தயாரிக்கவும் செல்லுலோஸ் பெரிதும் பயன் படுகிறது.

மனிதர்களால் செல்லுலோசை ஜீரணிக்க முடியாது. ஆனால், ஆடு, ஒட்டகம் போன்ற மிருகங்கள் தங்கள் வயிற்றில் ஒருவகை நுண்மங்களாகிய பாக்டீரியாக்களைப் பெற்றுள்ளன. அவற்றின் உதவி கொண்டு செல்லுலோசை உண்டு சீரணம் செய்து கொள்கின்றன.


செயற்கைக் கோள் : வானில் சூரியனைச் சுற்றிலும் பூமி, சந்திரன், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்கள் சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததே. இவை யெல்லாம் சூரியனைச் சுற்றி வரும் இயற்கைக் கோள்கள். இதே போன்று பூமியைச் சுற்றிவர செயற்கையாக உருவாக்கி ஏவப்பட்டுள்ள கோள்கள் செயற்கைக் கோள்களாகும். மனிதனால் உருவாக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படும் இச் செயற்கைக் கோள்கள் மூலம் பல்வேறு பயன்கள் கிட்டுகின்றன. ராக்கெட்டுகள் மூலம் விண்ணிற்கு அனுப்பப்படும் இச் செயற்கைக் கோள்கள் பூமியின் நீள்வட்டப் பாதையை அடைந்து உலகை வலம் வருகின்றன.

அற்புதமான செய்தித் தொடர்புக் கருவியாக அமைந்துள்ள இச் செயற்கைக் கோள்களில் மிக நுட்பமான கருவிகள் பல வைக்கப்பட்டுள்ளன. இவை பூமியிலிருந்து செய்திகளைப் பெற்று குறிப்பிட்ட இடங்களுக்கு அச்செய்திகளை ஒலியாகவும் ஒளியாகவும் வழங்குகின்றன.

இத்தகைய செயற்கைக் கோள்களை முதன் முதலில் விண்ணிற்கு அனுப்பிய பெருமை ரஷ்ய நாட்டையே சேரும். முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1957ஆம் ஆண்டு அக் டோபர் 2இல் ரஷ்யா விண்ணில் செலுத்தியது. இக்கோள் பூமியை ஒருமுறை சுற்றிவர 90 நிமிடங்கள் பிடித்தன. அதன்பின் இரண்டாவது செயற்கைக் கோளான ஸ்புட்னிக் - ஐ லைகா எனும் நாயுடன் அனுப்பியது.

அதன்பின் 1958 ஜனவரி 31இல் அமெரிக்கா 'எக்ஸ்புளோரர்’ எனும் செயற்கைக்கோளை உலகைச் சுற்றிவர விண்ணில்