பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தொழுநோய்

மூலம் செய்தி அனுப்பப்படுகிறது. இதன் மூலம் நாடுகளுக்கிடையேயும் செய்தித் தொடர்பு கொள்ள முடிகிறது.

கையட்டக்கத் தொலைபேசி

இன்று உலகெங்கும் வாழும் மக்கள் எளிதாகச் செய்தித் தொடர்பு கொள்ள செயற்கைக் கோள் வாயிலாக தொலைபேசி இணைப்புப் பெற்றுள்ளனர். இவ்வாறு பல்வேறு வகைகளில் செய்தி பெறும் தொலைபேசிகளை ஒருங்கிணைக்க தானியங்கித் தொலைபேசித்தொடர்பகங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றன.

தொலைவில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் பேசும் பேச்சொலியை மட்டுமே இது வரை கேட்க முடிந்தது. இப்போது அடுத்த முனையில் பேசுபவரின் முகத்தையே தொலைபேசிக் கருவி மூலம் பார்க்கவும் முடியும். இதை 'காட்சித் தொலைபேசி' என அழைக்கிறார்கள். -


தொழில் நுட்பவியல் : தொழிற்புரட்சியின் விளைவாக விரைந்து பொருள்களை உற்பத்தி செய்யப் பல்வேறு எந்திரங்களும் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளின் அமைப்பையும் இயங்கு முறைகளையும் விவரிப்பதே தொழில் நுட்பவியல் ஆகும். இதை ‘டெக்னாலஜி'(Technology) என்றும் கூறுவர்.

தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியினால் புதுப்புது எந்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் உற்பத்திபெருகுகிறது. தொழிற்சாலைகளின் பெருக்கத்திற்கேற்ப தொழில்துறை வளர்ச்சிகளும் செழுத்தோங்கியுள்ளன. புதிய புதிய தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றன. புதிய தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி ஆற்றல் மூலங்களான எண்ணெய், புனல்மின், அனல்மின் போன்றவற்றைவிட அணு சக்தியைத் தொழில்துறை வளர்ச்சிக்கு எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிய அரிய கண்டுபிடிப்புகளை நாளும் நமக்கு வழங்கிவருகிறது. உணவு உற்பத்திக்கு ஆதாரமான விவசாய வளர்ச்சிக்கும் பொருள் உற்பத்திக்கும் நிலைக்களனாக விளங்கும் இயந்திரவியல் துறை, போக்குவரத்துத் துறை மேம்பாட்டுக்கும் பெருந்துணையாய் அமைந்துள்ளது.

தொழில்நுட்ப அறிவு தொழில்நுட்பக் கல்வி மூலம் பெறப்படுகிறது. தொழிற் கல்வி ஏட்டுப் படிப்போடு அமையாது தொழில்நுட்ப பயிற்சி மூலமும் அளிக்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பக் கல்வியை மருத்துவ, பொறியியல், வேளாண்மைக் கல்லூரிகளும் 'பாலி டெக்னிக்’ என்றழைக்கப்படும் பல் தொழில் கல்விக்கூடங்களும் அளிக்கின்றன.


தொழுநோய் : முன்பு தொழுநோய் ஒரு பயங்கர தொற்று நோயாகக் கருதப்பட்டது. இதனால், தொழுநோய் கண்டவர் தனிமைப்படுத்தப்பட்டார். இறக்கும்வரை தனி வாழ்வு வாழ வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இன்று தொழுநோயைப் பொறுத்தவரை நிலைமை முற்றாக மாறிவிட்டது.

தொழுநோய் பலவகையினவாகும். ஒரு சிலவற்றைத் தவிர மற்ற வகைகள் தொற்றும் தன்மை அற்றவை. இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையாக மருத்துவம் செய்து கொண்டால் எளிதில் விரைந்து குணமடைந்து விட முடியும்.

தொழுநொய் 'மைக்கோ பாக்டீரியம் லெப்ரோ' (Mico bacterium leppre) என்னும் கிருமிகளால் உண்டாகிறது. இக்கிருமிகள் முதலில் சருமத்தையும் பின்னர் நரம்புகளையும் அல்லது இரண்டையும் பாதிக்கிறது. தொழுநோயை உண்டாக்கும் கிருமிகளை ஹேண்சன் (Hansen) எனும் நார்வே நாட்டு ஆய்வாளர் கண்டறிந்தார்.

தொழுநோய்க் கிருமிகள் முதலில் சருமத்தைப் பாதிக்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பின் உடல் தோலில் சிறுசிறு முடிச்சுகள் போன்ற கட்டிகளை உருவாக்குகின்றன. இவை மிக மெதுவாகவே உருவா கின்றன. இவற்றின் பாதிப்பு நெற்றி, மூக்கு, காது. உதடு ஆகிய பகுதிகளில் அதிகமாக இருக்கும்.

தொழுநோய்க் கிருமிகள் நரம்பைப் பாதித்தவுடன், அப்பகுதி உணர்ச்சியற்றுப் போகிறது.