பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

நீர்மூழ்கிக் கப்பல்

உயரத்தையும் பொறுத்து அமையும். இதனால் பெரும்பாலும் நீர்மின் உற்பத்திக்கான இடங்கள் உயரமான மலையில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. நீலகிரி மலையில் உள்ள பைக்காரா, குந்தா, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியாறு மின்னாக்க நிலையங்கள் இத்தகையனவாகும். மேட்டுர் அணை தரைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மின்னாக்க நிலையத்துக்கு எடுத்துக்காட்டாகும். மலைப் பகுதிகளில் பாய்ந்து வரும் அணை நீரிலிருந்து ஒன்றொடொன்று இணைந்ததாக தொடர் மின்னாக்க நிலையங்கள் அமைக்கப்படுவதுண்டு. உதாரணமாக நீலகிரி மலையில் அமைக்கப்பட்டுள்ள பைக்காரா மின்னாக்கி நிலையத்திலிருந்து பாய்ந்தோடும் நீரைக்கொண்டு மோயாறு என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னாக்க நிலையம் மீண்டும் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.


நீர்முழ்கிக் கப்பல் : நீரினுள் மூழ்கியவாறே செல்லும் கப்பல் நீர்மூழ்கிக் கப்பலாகும். இஃது நீளவாட்டத்தில் அமைந்திருக்கும். நீர் மூழ்கிக் கப்பலின் முன் பகுதியும் பின்பகுதியும் ஓரளவு ஒடுங்கியிருக்கும். நடுப்பகுதி சற்று அகன்றும் உயர்ந்தும் அமைந்திருக்கும். விரும்பும்போது கடல் மட்டத்திற்கோ அல்லது கடலில் குறிப்பிட்ட ஆழத்திற்கோ கொண்டு செல்ல முடியும்.

நீர்மூழ்கிக் கப்பலின் உடற்பகுதி இரு கூடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். கடல் நீருள் அமிழ்ந்து செல்லும்போது நீரின் அழுத்தத்தை நன்கு தாங்கும் வண்ணம் இக் கூடுகள் உறுதி மிக்கவையாக அமைந்திருக்கும். உள் கூட்டிற்கும் வெளிக் கூட்டிற்குமிடையே இடைவெளி இருக்கும். இவ்விடைவெளியில் நீர் நிறைந்தவுடன் நீர்க் கனத்தால் நீரும் அமிழும். அந்நீர் இடைவெளியிலிருந்து அகற்றப்பட்டவுடன் கணம் குறைந்து நீர்ப் பரப்பை நோக்கி மேலெழும்.

நீர் மூழ்கிக் கப்பலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள உயரமான பகுதியில் பெரிஸ்கோப் எனும் தொலைநோக்கிக் கருவி அமைந்துள்ளது. இது எப்போதும் நீர்மட்டத்திற்கு மேலாகவே இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இதன் மூலம் கடலின் மேற்பரப்பில் சென்று கொண்டிருக்கும் கப்பல்களின் நடமாட்டத்தை உள்ளிருந்தபடியே அறிந்து கொள்ள முடிகிறது.

நீர்மூழ்கிக் கப்பல்

நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையின் இன்றியமையா அங்கமாக இன்று விளங்கி வருகிறது. இவை இன்று கடற்பகுதி ஏவுகணைத் தளங்களாகவும் விளங்கி வருகின்றன.

நீர்மூழ்கிக் கப்பல்களின்மூலம் எதிரிக் கப்பல்களை மட்டுமல்லாது எதிரியின் விமானங்களையும் அறிந்து அவற்றின்மீது ஏவுகணைகளைச் செலுத்தி அழிக்க முடிகிறது. கடலில் உலவும் கப்பல்களை அழிக்க வெடிகுண்டுகளை வைக்கவும் எதிரிகளால் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

கடலினுள் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்றே சென்று, எதிரிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஒருவகை நீர்மூழ்கிக் கப்பல் உண்டு. அஃது ‘டார்பிடோ’ என அழைக்கப்படுகிறது.

போர்ச் செயல்களுக்கு மட்டுமல்லாது கடலடி ஆய்வுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென அணுச் சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றால் பல அறிய கடலடி வாழ் உயிரினங்களும் உள் அமைப்புகளும் கண்டறியப்படுகின்றன.