பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

பெட்ரோலியம்

நிறுவினார். தீயணைப்புத்துறை போன்ற பொது அமைப்புகளை உருவாக்கினார். அமெரிக்காவிலேயே முதல் மருத்துவ விடுதியான பென்சில்வேனியா மருத்துவ விடுதியைத் தொடங்கினார். இவர் ஆரம்பித்த பென்சில் வேனியாக் கழகமே இன்று புகழ் பெற்று விளங்கும் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகமாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருவாக உறுதுணையாயிருந்த இவர் மாபெரும் அரசியல் மேதையாக விளங்கியதோடு சிறந்த அறிவியல் அறிஞராகவும் புத்தமைப்பாளராகவும் விளங்கினார். மின்சக்தியால் உருவாவதே மின்னல் என்பதை முதன்முதல் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் இவரே. இடி தாங்கியைக் கண்டு பிடித்தவரும் இவரே. இதைக் கொண்டு உயிர்களையும் பொருட்களையும் அழியாமல் காக்க வழியமைத்தார். மின்சாரம் பற்றிய பல உண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை நூல் வடிவில் வெளிப்படுத்தினார். ஸ்டவ் அடுப்பை முதன்முதலில் கண்டுபிடித்து வடிவமைத்தார். இரட்டைக் கண்ணாடி அமைப்புள்ள கண் கண்ணாடியை இவரே கண்டறிந்தார். இன்னும் எத்தனையோ விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து உலகுக்குக் கூறிப் புகழ் பெற்றவர். இவர் தமது 85ஆம் வயதில் மறைவெய்தினார்.


பெட்ரோலியம் : பூமிக்கு அடியிலிருந்து கருவி மூலம் உறிஞ்சி எடுக்கப்படும் திரவ எரி பொருள் பெட்ரோலாகும். 'பெட்ரோலியம்’ எனும் சொல் 'பெட்ரோ ஒலியம்’ எனும் லத்தீன் சொல்லின் திரிபு ஆகும். இதற்குக் ‘கல் எண்ணெய்' (Rock oil) என்பது பொருளாகும்.

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஏற்பட்ட நில நடுக்கத்தாலும் பூமி அதிர்வாலும் பூகம்பத்தாலும் மண்ணுள் புதையுண்டு போன உயிரினங்களும் தாவரப் பொருட்களும் மண் பாறை, சுண்ணாம்புப் பாறை போன்றவற்றின் இடுக்குகளுக்கிடையே சிக்கி, நீர்த்துப் போயின. நாளடைவில் இவை நிலத்தடி வெப்ப அழுத்தத்தின் காரணமாக திரவ வடிவில் பெட்ரோலியமாகவும் நிலத்தடி இயற்கை வாயுவாகவும் உருமாறின. நிலக்கரியும் இவ்வகையில் உருவானதே யாகும்.

இவை நிலத்துக்கடியில் எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் புது வகைக் கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றின் துணைகொண்டு பூமிக்கடியில் துளையிட்டு பெட்ரோலை வெளிக் கொணர்கின்றனர். இஃது பார்ப்பதற்கு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகத் தோன்றும். இதைக் கச்சா எண்ணெய் என்று அழைப்பர். இது இருபது அடி முதல் பத்தாயிரம் அடி ஆழம்வரை பூமிக்கடியில் ஆழத்தில் கிடைக்கிறது.

பெட்ரோலியக் கிணற்றின் உள் தோற்றம்

கச்சா எண்ணெய் அப்படியே பயன்படுத்தப்படுவதில்லை. அதைச் சுத்திகரிப்பாலைக்குக் கொண்டு சென்று சுத்திகரித்தே பயன்படுத்துகின்றனர். சுத்திகரிப்பின்போது கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், தார் பலவகைப் பொருள்கள் பெறப்படுகிறது. பெட்ரோலிலும் தூய்மை செய்யப்பட்ட எண்ணெய் விமான எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.