பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீன்

245

பொருத்தப்பட்டுள்ள விளக்கை எரியச் செய்கிறது. சாதாரணமாக ஒவ்வொரு மின்னாக்கி எந்திரத்திலும் நான்கு வகை அமைப்புகள் இருக்கும். 1. புலக்காந்தம் (Field magnet) 2. செலுத்திவளையம் (Armature) 3. நழுவு வளையம் (Slip ring) 4. தூரிகைகள் (Brushes) என்பனவே அவை. இவற்றுள் புலக்காந்தம் என்பது எப்போதும் நிலையாக இருக்கும் முக்கிய உறுப்பாகும். இந்நிலைக் காந்தத்தின் இரு முனைகளுக்கிடையே வளையத்தைச் செலுத்திச் சுழலச் செய்வதன் மூலம் மின் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தை நழுவு வளையங்கள். துரிகைகள் மூலம் வேண்டிய இடத்திற்கு அல்லது பகுதிக்கு மின்சக்தியைக் கொண்டு செல்லலாம். அதிக அளவு அல்லது குறைந்த அளவு மின்சாரத்தை இத்தகைய மின்னாக்கிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். இம்மின்னாக்கிகள் சுழலும் வேகத்தைப் பொறுத்து உற்பத்தியாகும் மின்சக்தியின் அளவு அமையும்.

மின்னாக்கிகளும் பல்வேறு அளவுகளில் உள்ளன. சைக்கிள் போன்ற மிதிவண்டிகட்கு சிறிய அளவுடையதாகவும் மோட்டார் கார் போன்றவற்றிற்குச் சற்று பெரியதாகவும் பெரிய தொழிற்சாலைகளில் மிகப் பெரிய மின்னாக்கிகளும் உண்டு. சில பெரிய மின்னாக்கிகள் பெட்ரோல், டீசல் போன்றவைகளால் இயங்குகின்றன.


மீன் : நீர் வாழ் உயிரினமான மீன் ஆறு, குளம், ஏரி, கடல் ஆகியவற்றில் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. முதுகெலும்புள்ள உயிரினங்களிலேயே மிகப்பெரும் எண்ணிக்கையிலுள்ளவை மீன்களேயாகும். ஒரு சென்டி மீட்டர் அளவுள்ள மீன் முதல் 15 மீட்டர் நீள திமிங்கிலம்வரை பல அளவுள்ள மீன்கள் உள்ளன. திமிங்கிலத்தை மீன் இனத்தில் சேர்க்காது குட்டிபோட்டு பால் கொடுக்கும் விலங்கினத்தில் சேர்ப்பர்.

மீன் இனத்தில் முப்பத்திரெண்டாயிரம் வகைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். இவை மலை முகட்டில் உள்ள நீர்க் குட்டையிலிருந்து மாகடல்வரை வாழ்வனவாகும்.சிலவகை மீன்கள் உப்பு நீராகிய கடல் நீரில் மட்டுமே வாழ்வனவாகும். இன்னும் சில வகை மீன்கள் இருவகை நீரிலும் வாழ்வனவாகும். குளிர் இரத்தப் பிராணியான மீன்கள் தாங்கள் வாழும் பகுதியிலுள்ள நீரின் வெப்பத்தன்மைக்கேற்ப அவற்றின் உடலின் வெப்பநிலை அமையும்,

மீன்களை மூன்று பிரிவாகப் பகுப்பர். முதல் வகை, எலும்புச் சட்டகம் முழுமையும் குருத்தெலும்பாலான மீன்கள். இவற்றிற்கு உதாரணமாக சாய்சதுர வடிவுடைய பெரிய கதிர்க்கைக் கடல் மீன் வகைகளையும் சுரா மீன் மற்றும் திருக்கை மீன்களையும் கூறலாம். இவைகள் எலும்புக் கூட்டிற்குப் பதிலாக உறுதியான அதே சமயம் நெகிழ்வுத் தன்மையுள்ள குருத்தெலும்புகளைக் கொண்டுள்ளன. செதில்கள் இருக்கவேண்டிய பகுதிகளில் நல்ல விறைப்பும் கெட்டித் தன்மையுள்ள உறுதியான மேல் தோலைப் பெற்றுள்ளன.

இரண்டாம் பிரிவு, எலும்புள்ள மீன்களாகும். மீன்களில் இப்பிரிவே மிகப்பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன. இம்மீன் முழுமையாக எலும்புக் கூட்டைக் கொண்டுள்ளன. இவற்றை மூடியுள்ள மேல் தோல்மீது அமைந்துள்ள செதில்களும் கூட எலும்பைப் போல் உறுதியானவையாகும்.

மூன்றாம் பிரிவு, நுரையீரலைக் கொண்டுள்ள மீன்களாகும். இத்தகைய மீன்களில் சில நுரையீரலோடு காற்றுப்பையையும் கொண்டிருக்கும். இக்காற்றுப்பை சிறுநீரகத்திற்கு அடியிலே அமைந்திருக்கும். இஃது சில மீன்களுக்கு மிதவையாகவும் பயன்படுகின்றன. இவ்வகை மீன்கள் அனைத்தும் எப்போதும் நன்னீரிலேயே வாழும்.

மீன்கள் நீரில் எளிதாக நீந்த பலவகைத் துடுப்புகளைப் (Fins) பெற்றுள்ளன. இவை கால்களைப் போன்று செயல்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக நீந்துகின்றன. உந்திச் செல்ல உதவுகின்றன. இவை இடம் வலமாகத் திரும்பவும் உதவுகின்றன. இதன் முதுகுத் துடுப்பும் மீனைச் சமநிலையில் இருக்கத் துணைசெய்கின்றன. மார்புப் பகுதியில் உள்ள இரு துடுப்புகள் மீன் மேலும் கீழுமாகச் செல்ல உதவுகின்றன. சிலசமயம் இம்மீன்கள் கரைக்கு வருவதுண்டு.

பெரும்பாலான மீன்கள் செவுள்கள் மூலமாகவே சுவாசிக்கின்றன . வாய்மூலம் உள்ளிழுக்கும் நீரைச் செவுள்கள் மூலம் வெளியேற்றுகின்றன. அப்போது நீரில் கரைந்துள்ள பிராணவாயுவை (ஆக்சிஜன்) செவுள்கள் மூலம் சுவாசிக்கின்றன. அப்போது அதன் இரத்தத்திலிருந்து வெளியேறும் அசுத்தக்