பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மேகம்

கேட்பு நரம்புகளும் சிறுமூளையோடு இணைக்கப்பட்டுள்ளன.

வலது. இடதுபாதி மூளையின் பல்வேறு செயல்கள்

மூளையின் மற்றொரு முக்கியப் பகுதி முகுளம் ஆகும். இஃது மூளையின் அடிப்பகுதியில் குமிழி வடிவில் அமைந்துள்ளது. முதுகெலும்போடு இணைந்துள்ள தண்டுவடத்தை மூளையோடு இணைப்பது முகுளமேயாகும். முகுளத்தின் முக்கிய பணி மூச்சு, இரத்தவோட்ட, சீரண உறுப்புகளை சீராக இயங்கச் செய்வதாகும். இதற்காக இதயம், துரையீரல், இரைப்பை, குடல் போன்ற உறுப்புகளைக் கட்டுப்படுத்திச் செம்மையாக இயக்குகிறது. உடலின் வெப்ப நிலையைச் சீராக இருக்கச் செய்வதும் முகுளமே யாகும்.

மூளைக்குச் செய்தியனுப்பும் தண்டுவடம், தானாக தசைகளுக்கு உத்திரவு பிறப்பிப்பதும் உண்டு. நாம் சில சமயம் நம்மையும் அறியாமல் எறும்பு கடித்தால் உதறுகிறோமல்லவா, இத்தகைய அனிச்சைச் செயல் தண்டுவட ஆணையின்படி நடப்பதாகும்.


மேகம் : கிணறு முதல் மாகடல் வரையுள்ள நீர்ப்பரப்புகளிலிருந்து சூரிய வெப்பத்தால் நீராவி உருவாகி மேல் நோக்கி ஆகாயத்தை அடைகிறது. வானில் குறிப்பிட்ட உயரத்தை எட்டியவுடன் வேகமாக உருமாறுகிறது. அப்போது அங்கு மிதந்து கொண்டிருக்கும் ஏராளமான தூசித் துகள்களைச் சுற்றி நீர்த்துளிகள் படிந்து மழை மேகமாக ஆகிறது. அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருக்கும் இக் கார் மேகம் மேலும் குளிர்ச்சியடையும்போது நீர்த் திவலைகளாக மாறி மழையாகப் பெய்கிறது. சிலசமயம் ‘ஆலங்கட்டி’ மழையாகப் பொழிவதும் உண்டு.

மேகக் கூட்டங்கள் ஒன்றைப் போலவே மற்றொன்று காணப்படுவதில்லை. வெவ்வேறான உயரத்திலும் தட்பவெப்ப நிலையிலும் மேகங்கள் உருவாவதால், அவை பலவகைப்