பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மைக்ராஸ்கோப்

வடிவம் என்று ஏதுமில்லை. இதற்கும் கீழாக 350 மீட்டர் உயரத்தில் உள்ள மேகம் மூடு பணிபோல் காணப்படும்.

கோடை காலத்தில் நீரானது நீராவியாக மேலே சென்று மேகமாகி, குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என முன்பே அறிந்தோம். அதேபோன்று மலை அருகில் உருவாகும் நீராவி தாங்கிய காற்று அருகில் உருவாகும். நீராவி தாங்கிய காற்று மலைப் பகுதி மேல் செல்லும்போது குளிர்ச்சியடைந்து மேகமாக மாறுகிறது. அதனால்தான் மலைகளில் அதிக அளவில் மேகக்கூட்டங்களைக் காண்கிறோம்.

இதே சமயத்தில் பாலைவனப் பிரதேசங்களில் மேகக் கூட்டத்தையே காண முடிவதில்லை. காரணம், அங்கு அதி வெப்பம் நிலவுவதால் காற்றில் ஈரம் இருக்க வழியில்லாமல் போகிறது. ஈரப்பதம் இல்லாத காற்று மேலெழுந்து சென்றாலும் மேகமாக மாறமுடியாமற் போய்விடுகின்றது. எனவே, பாலைவன ஆகாயம் மேகமேதும் இல்லாமல் வெறுமையாய் வெறிச்சோடிக் கிடக்கிறது.

போதிய மழையில்லாதபோது விமானம் மூலம் சென்று மேகங்களின் மீது இரசாயனத் தூள்களைத் தூவி மழை மேகமாக மாற்றி மழை பெய்விக்க செயற்கை மழை முயற்சி மேற் கொள்ளப்படுகிறது. மேகங்கள் இல்லாத வானத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பெய்விக்க முடியாது.


மைக்ராஸ்கோப் : இக் கருவி தமிழில் 'நுண் பெருக்கி’ என அழைக்கப்படுகிறது. நம் பார்வைக்குப் புலனாகாத மிக நுட்பமான பொருட்களைப் பலமடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் கருவியாகும் இது. இவ்வாறு பல மடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் இக்கருவியின் கண்ணாடி 'நுண்பெருக்காடி’ என அழைக்கப்படுகிறது.

நமக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. இந் நோய்களுக்கெல்லாம் மூல காரணமாக அமைவது நோய்க் கிருமிகளாகும். இக் கிருமிகள் பலவும் நம் கண்னுக்குப் புலனாகாத அளவுக்கு மிக நுண்ணிய நுண்மங்களாகும். இவற்றைப் பல மடங்குப் பெரிதாகப் பெருக்கிக் காட்டும் கருவிகள் மூலமே இவற்றைக் காண இயலும். மைக்ராஸ்கோப் கருவி மூலம் இரத்தப் பரிசோதனை செய்து பார்க்கும் போது நோய்க்கிருமிகள் உயிருடன் நெளிந்து கொண்டிருப்பதைத் தெளிவாகக் காண முடியும். நோய்க் கிருமிகளில் பல வகைகள்

நுண்பெருக்கிக் கருவி

உண்டு என முன்பே கூறப்பட்டுள்ளது. அதில் ஒருவகை 'பாக்டீரியா’ எனும் நோய் நுண்மங்களாகும். பாக்டீரியாக்களைப் பற்றி ஆராயும் இயல் 'பாக்டீரியாவியல்’ எனப்படும். இத்துறை இன்று வெகுவாக வளர்ந்துள்ள தென்றால் அதற்கு அடிப்படையாய் அமைந்திருப்பது மைக்ராஸ்கோப் உருப்பெருக்கிக் கருவியேயாகும். தாவரங்களின் வேர்ப்பகுதி, இலை போன்றவற்றின் நுண்ணிய பகுதிகளின் அமைப்பை அறிந்து கொள்ளவும் இக் கருவியே பெரிதும் பயன்படுகிறது.

அறிவியலின் அனைத்துப் பிரிவுகளின் ஆய்வுக்கும் மைக்ராஸ்கோப் மையக் கருவியாக அமைந்து வருகிறது எனலாம். இக் கருவி இரு வகைகளில் அமைந்துள்ளது. முதல் வகை ஒரே ஒரு குவிலென்சைக் கொண்டு அமைந்துள்ள சாதாரண மைக்ராஸ்கோப் ஆகும். இதன் மூலம் பார்வைக் குறைபாடுடையவர்கள் சிறிய எழுத்துக்களை பெரிதாக்கிப் படிக்கவும் மெல்லிய கைரேகைகளை சற்றுப் பெரிதாக்கிக் காணவும் இயலுகிறது. கடிகாரம் பழுது பார்ப்போர் கடிகாரத்தின் நுண்ணிய பாகங்களைப் பெரிதாக்கிக் காண்பதன் மூலம் எளிதாகப் பழுது பார்க்க முடிகிறது. ஆனால், சாதாரண மைக்ராஸ்கோப் மூலம் பொருட்களை ஒரளவுக்கே பெரிதாக்கிக் காண முடியும்.

கூட்டு மைக்ராஸ்கோப் எனும் கருவியே அதிக அளவில் ஆய்வுக்கும் பயன்படுகிறது.