பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானவில்

277


வானவில் : சற்று மழைத்துாறல் உள்ள காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ கதிரவனுக்கு எதிர்த்திசையில் வானில் ஏழு வண்ணங்களோடு வில்போல் வளைந்த வண்ணக் காட்சியைக் காணலாம். இதுவே 'வானவில்' என அழைக்கப்படுகிறது. சூரியக் கதிர் மழைத் துளியினூடே பாய்வதால் ஏழு வண்ணங்கள் எழுகின்றன.

சாதாரணமாக நாம் காணும் சூரியக் கதிர் வெண்மை நிறமுடையது போன்று தோற்றம் தருகிறது. ஆனால், உண்மையில் சூரியக் கதிர் வெண்மை நிறமுடையதன்று. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என ஏழு வண்ணங்கள் உள்ளடங்கிய கதிராகும்.

சூரியக் கதிரானது பட்டகத்தின் வழியே செல்லும்போது எதிர்த்திசையில் ஏழு வண்ணங்களைக் கொண்ட ஒளியாக நிறப்பிரிகை அடைகின்றது. ஏழு வண்ணமுடைய வானவில் தோன்ற மழைத் துளிகள் சூரியக் கதிர் ஊடுருவும் பட்டகங்களாக அமைகின்றன. அதனாலேயே வானவில் சூரியனின் எதிர்த்திசையில் உருவாகித் தோற்றமளிக்கின்றது.

வானவில் தோன்றுவதற்கு மழைத் துளிகளும் சூரியக் கதிரும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்றிருந்து ஒன்றில்லா விட்டால் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை. அவை இரண்டும் இருந்தபோதிலும் எல்லா நேரத்திலும் வானவில் தோன்றுவதில்லை. காலை அல்லது மாலை நேரங்களில் கதிரவன் 420 கோணத்தில் தாழ்வாக இருக்கும்போது மட்டுமே வானவில் தோன்ற இயலும். அப்போதுதான் ஒளி மழைத்துளியிலும் புகும். சூரியக் கதிரின் ஏழு வண்ணங்கள் கண் பார்வையில் படிய இயலும். மற்ற நேரங்களில் இஃது கண்பார்வைக்கு எட்டாத நிலை பெறுவதால் நம் கண்களுக்குத் தோற்றம் தருவதில்லை. வேகமாக விழும் நீர் அருவிகளின் அருகே காலை அல்லது மாலை வேளைகளில் இத்தகைய வானவில்களை அடிக்கடி காணலாம். இவை வில் வளைந்த வடிவில் காட்சி தரும்.

சில சமயம் சந்திர வொளியினால் வானவில் உருவாவதும் உண்டு. எனினும் இவை ஒளி குன்றியவைகளாகத் தோற்றமளிக்கும். காரணம், சூரிய ஒளியைவிட சந்திரனின் ஒளி மங்கித் தோன்றுவதேயாகும்.


வானவியல் : ஆங்கிலத்தில் 'அஸ்ட்ரானமி’ என அழைக்கிப்படும் வானவியல், வானில் உள்ள கதிரவன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உட்பட அனைத்தையும் பற்றிய 'ஆய்வியல்' ஆகும்.

மனிதன் என்றைக்கு ஆய்வு நோக்கோடு வானை அளக்கத் தொடங்கினானோ அன்று முதலே வான்வியலும் கால்கொண்டுவிட்ட தெனலாம். இத்துறையில் பண்டைக் காலம் முதலே கிரேக்கம், பாபிலோனியா, எகிப்து, சீனம், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வானவியல் அறிஞர்கள் தலைசிறந்து விளங்கியவர்களாவர். இவர்களுள் மிக முக்கியமான வராகக் கருதப்படுபவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் ஹிப்பார்க்கஸ் ஆவார். இவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் வானில் மின்னும் 890 நட்சத்திரங்களை இனங்கண்டு. அவற்றிற்குப் பெயரிட்டு, பட்டியல் தயாரித்தவர். இவரே வானவியலின் முன்னோடியாவார். கிரேக்க நாட்டின் மற்றொரு வானவியல் அறிஞர் தாலமி என்பவராவார்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் நிலவுலகை மையமாகக் கொண்டே பிரபஞ்சம் இயங்குகிறது என்றும் கதிரவனும் நிலவும் பூமியைச் சுற்றியே வருகிறது என்றும் கூறினார். பதினொராம் நூற்றாண்டில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டாம் ஆரியபட்டர் எனும் வானியல் வல்லுநர் பூமியும் மற்ற கிரகங்களும் கதிரவனைச் சுற்றியே இயங்குகின்றன என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினார்.இவரது வானவியல் ஆராய்ச்சிகளை விளக்கும் நூல் 'மகா சித்தாந்தம்' என்பதாகும். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பர் நிக்கஸ் எனும் வானவியலறிஞர் ஆதாரபூர்வமாக பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றன என்பதை ஆய்வு பூர்வமாகத் தெளிவாக்கினார். இக்கருத்து கிருத்துவக் கோட்பாட்டுக்கு மாறாக இருந்ததால் அச்சமயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாக நேர்ந்தது. ஆனால், காலிலியோ எனும் வானவியல் வல்லுநர் தொலைநோக்கிக் கருவியின் துணைகொண்டு கோப்பர்நிக்கசின் வானவியல் கண்டுபிடிப்புகளை நிலை நிறுத்தினார். அத்துடன், தொலைநோக்காடியின் துணைகொண்டு கதிரவனில் காணும் கரும்புள்ளியையும் நிலவில் காணும் மலைகளையும் கண்டறிந்து கூறினார். இவரது கண்டுபிடிப்புகளே வான